அனைத்து வரைவு திருத்தங்களும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக அமைந்துள்ளதால் இந்த வரைவு மின்சார, சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கைவிட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முதல்வரால் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அரசு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைகளையும் அனுமதிக்காது. 

தமிழக மக்களுக்கு பாதகமான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என்ற ஜெயலலிதாவின் கொள்கையினை கடைபிடிக்கும் வகையில் முதல்வர் மேற்கூறிய வரைவு மின்சார சட்டத்திருத்தம் அமலாக்கத்திற்கு வராதவண்ணம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார் என்று தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.


மின்சார சட்டத் திருத்தம் - 2020 என்ற வரைவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரைவுக்கு தமிழகத்தில் திமுக, மதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டால், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரம் ரத்த ஆகும்; மின்சார வாரியம் தனியார் கைகளுக்கு செல்லும் என்றும் எதிர்க்கட்சிகள் எச்சரித்துவருகின்றன. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மத்திய அரசு 17.04.2020 அறிவிப்பின் வாயிலாக 2020-ம் ஆண்டு வரைவு மின்சார சட்டத்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியிட்டு, அனைத்து மாநிலம் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த வரைவு மின்சார சட்டத்திருத்தத்திலுள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முக்கிய சரத்துக்களை நீக்க மத்திய அரசை வலியுறுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க எடுத்த நடவடிக்கைக்கு பிரதமருக்கு, முதல்வர் 23.12.2014 அன்று எழுதிய கடிதத்தில் அதனை கைவிடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.