ஆளும் அ.தி.மு.க.வின் தலைமை பீடத்தினர், நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பிஸியாக இருக்கிறார்கள்! என்று நினைத்தால், நீங்கள் ஒரு ஏமாந்த டூமாங்கோலி. ஆம்! ஆட்சி கவிழுமோ எனும் பயத்தில் எக்கச்சக்கமான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது எடப்பாடியார் டீம்! என்றே உறுதியான தகவல்கள் சுழன்றடிக்கின்றன. 

மே 23-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி! என்று ஸ்டாலின் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தாலும் கூட எடப்பாடியார் கண்டுட்டு இருக்க மாட்டார். ஆனால், டெல்லி பி.ஜே.பி. தமிழக அரசியல் அரங்கில் சில புது லாபிகளை உருவாக்க துவங்கியுள்ளது அவரை நோகடித்திருக்கிறது. அதாவது தி.மு.க. அணி நிச்சயம் பெரியளவில் வெல்ல போகிறது! என்று மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதால், தேர்தலுக்கு பிறகு புது கூட்டணி அமைத்து, ஆட்சியை தக்க வைக்க, ஸ்டாலினின் நட்பை மோடி எதிர்பார்க்கிறார்! என்கிறார்கள். அதை நோக்கியே மோடி நகர துவங்கிவிட்டார் என்றும் தகவல்.

அதேபோல் தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க, அ.தி.மு.க. தரப்பிலிருந்து எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஸ்டாலின் மற்றும் தினகரன் இருவரும் வலுவாக இறங்கிவிட்டனர் என்றும் ஒரு பக்கம் தகவல்கள் தடதடக்கின்றன. ஆகவே தன் எம்.எல்.ஏ.க்களை தனது கட்டுப்பாட்டினுள் வைக்கும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கிவிட்டார் எடப்பாடியார் என்கிறார்கள். 

பணத்தை கொட்டிக் கொடுக்குறது  மூலமாக மட்டுமே எம்.எல்.ஏ.க்களை கட்டுக்குள் வைக்க முடியாது! ஏனென்றால், பத்து கோடி இவர்கள் கொடுத்து தக்க வைத்தால், பதினோறு கோடியாக எதிர்கட்சி கொடுக்கையிலோ அல்லது அமைச்சர் பதவி, வாரிய தலைவர் தருகிறேன் என்று சொன்னாலோ தாவுவார்கள்! என்று எடப்பாடியார் கணித்து வைத்திருக்கிறார். ஆக என்ன செய்யலாம்? என்று அவர் யோசிக்கையில், அவருக்கு நெருக்கமான இரு முக்கிய அமைச்சர்கள் ‘செண்டிமெண்டால நம்மாளுங்களை கட்டி வைப்போம்’ என்று நம்பிக்கை ஊட்டி, அவரிடம் அனுமதியும் வாங்கி, கன கச்சிதமாக் காரியத்தில் இறங்கியும் விட்டார்கள். 

இதன்படி அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்களை ஒவ்வொருவராக பர்ஷனல் இடங்களுக்கு வர வைத்து சத்தியம் வாங்கிக் கொண்டிருக்கிறார்களாம். வெறுமனே வாய் வார்த்தையில் மட்டும் இல்லாமல், எழுதியும் வாங்காமல், ததும்ப ததும்ப தூய பசும்பால் மீதும், குல தெய்வத்தின் பெயர் மீதும், எரியும் கற்பூரத்தின் மீதும், எம்.எல்.ஏ.க்களுக்கு பேரன் பேத்திகளாக கைக்குழந்தைகள் இருந்தால் அவர்கள் பெயரிலும் சத்தியம் செய்ய வைத்து ‘எந்த சூழலிலும், எவ்வளவு நெருக்கடியோ அல்லது ஆசையோ காட்டினாலும் அ.தி.மு.க.வுக்கும், ஆட்சி தலைமைக்கும் துரோகம் செய்ய மாட்டேன்.’ என்று சத்தியம் வாங்கப்படுகிறதாம். சத்தியத்தை மீறினால்...தெய்வ குத்தத்துக்கு ஆளாகுவீங்க, பார்த்துக்குங்க! என்று செண்டிமெண்டலாய் செல்லமாய் மிரட்டப்படுகிறார்களாம். 

தெற்கு பகுதி எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் துவங்கி, மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது இந்த சத்திய மேளா. இதைச் செய்து கொடுக்க தனி டீமே உருவாக்கப்பட்டுள்ளது! என்கிறார்கள். தலைமைக்கு விசுவாசமாய் இருப்பதாக உறுதியடித்துச் சொல்லும் சில எம்.எல்.ஏ.க்கள் ‘என்னண்ணே இப்படி பச்சப்புள்ள மேலே எல்லாம் சத்தியம் வாங்குறீக? நான் விசுவாசம் தப்பாட்டாலும் கூட ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிப்போச்சுன்னா நீங்களா பதில் சொல்றீக?’ என்று கொதிக்கிறார்களாம், சிலரோ ‘என்னய நம்பலயாவே?’ என்று கதறுகிறார்களாம். அதற்கு “அண்ணே நம்ம முதல்வர் ஒண்ணும் உம்ம நம்பாம இல்ல. இதைச் செய்ய சொல்லி எடப்பாடியார் உத்தரவிடலை. நாமளா ஒரு சேஃப்டிக்கு பண்ணிக்கிறோம். தகவல் முதல்வருக்கு தெரிஞ்சா எங்களைத் துரத்திடுவாரு கட்சிய விட்டு.” என்று பதில் வருகிறதாம். 
காரணம்?...என்னதான் சத்தியம் செய்தாலும் கட்சி நிர்வாகிகளின் அடிப்படை நம்பிக்கையை இழந்துவிட கூடாதே எனும் பயமும்தான். 

ஹும், அரசியல் பொல்லாதது!