ediyurappa take oath as cm of karnataka
பலத்த சர்ச்சைக்கிடையே கர்நாடக மாநிலத்தின் 23 ஆவது முதலமைச்சராக எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார்.
கர்நாடகத்தில் கடந்த மே 12 ஆம் ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின் படி எந்த ஒருக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வென்றது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம் (எஸ்) 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள
இதனிடையே சட்ட ஆலோசனைகளை நடத்திய ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். மேலும், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் , எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது.
இதையடுத்து இன்று எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக காலை 8.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து ஆளுநர் மாளிகை புறப்பட்ட எடியூரப்பாவுக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பதவியேற்பதற்கு முன்பாக பெங்களூருவில் உள்ள கோவிலில் எடியூரப்பா சாமி தரிசனம் செய்தார்.
பதவியேற்பு விழா நடைபெறுவதையொட்டி, ஆளுநர் மாளிகை முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆளுநர் மாளிகை முன்பு குவிந்த பாரதீய ஜனதா தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 9 மணியளவில், ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில், நடைபெற்ற நிகழ்ச்சியில், எடியூரப்பா முதல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். எடியூரப்பாவுக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடக மாநிலத்தின், 23-வது முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார்.
