ஒரே அறிவிப்பில் இஸ்லாமியர்களை குளிரவைத்த எடப்பாடியார்.. முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி பாராட்டு.
அதேபோல, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் போது, ஊரடங்கை மீறியதாக பேரிடர் கால சட்டங்களைச் சுட்டிக்காட்டி பல்வேறு பிரிவுகளில் லட்சக்கணக்கான வழக்குகள் பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மீது பதியப்பட்டன.
குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது என எஸ்டிபிஐ கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் (பிப்.19) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரோனா கால விதிமுறைகள் மீறல், குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். தமிழக முதல்வரின் அறிவிப்பினை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது.
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிய பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், ஜமாத்தினர், மாணவர்கள், பெண்கள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளை தமிழக காவல்துறை பதிவு செய்தது. தமிழகம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மக்கள் விரோத சட்டங்களை இயற்றியுள்ள மத்திய அரசை விமர்சித்து பேசுபவர்கள் மீதும் பாஜகவின் அரசியல் அழுத்தம் காரணமாக வழக்குகள் தொடுக்கப்பட்டன.
அதேபோல, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் போது, ஊரடங்கை மீறியதாக பேரிடர் கால சட்டங்களைச் சுட்டிக்காட்டி பல்வேறு பிரிவுகளில் லட்சக்கணக்கான வழக்குகள் பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மீது பதியப்பட்டன. அந்த வழக்குகளில் இருந்து விடுபடாமல் ஆயிரக்கணக்கானோர் பரிதவித்து வருகின்றனர். அவர்களின் முக்கியமானவர்கள் வியாபாரிகளும், இளைஞர்களும் ஆவார்கள். ஆகவே, குடிமக்கள் மீதான அக்கறையுடன் இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் சிஏஏ எதிர்ப்பு போராட்ட வழக்குகள், கொரோனா கால விதிமீறல் வழக்குகள் ரத்து தொடர்பான தமிழக முதல்வரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது வரவேற்கத்தக்கது.
எனினும் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட சுமார் 1500 வழக்குகளில் குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், இப்போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிஏஏ சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் ஜனநாயக வழியில் அரசமைப்பை பாதுகாக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்களாகும். இந்த போராட்டங்களில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், பல்வேறு தலைவர்களும் ஈடுபட்டனர். இவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுமா என்பது முதல்வரின் அறிவிப்பில் இல்லை. ஆகவே, பாரபட்சம் காட்டாமல், சிஏஏவுக்கு எதிரான அனைத்து போராட்ட வழக்குகளையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.