Edappadi Team celebration Election Commission cancelled bypoll in RK Nagar constituency
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து அறிவிப்பு, தினகரனை தவிர, அனைவருக்குமே மகிழ்ச்சியை தந்துள்ளது. குறிப்பாக, முதல்வர் எடப்பாடிக்கு பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எப்படியாவது, முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விட வேண்டும் என்பதே தினகரனின் திட்டமாக இருந்தது.
அதனால், தமது முதல்வர் பதவிக்கு சிக்கல் வந்து விடும் என்று அஞ்சிய எடப்பாடி, மனதுக்குள்ளேயே புகைந்து கொண்டு இருந்தார்.
தேர்தல் கருத்துக் கணிப்புகள் என்னதான், மதுசூதனனுக்கு, மருது கணேஷுக்கு வெற்றி வாய்ப்பு என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், கடைசி நேரத்தில், தினகரனின் தரப்பில் வாரி இறைத்த பணம் அதை எல்லாம் பொய்யாக்கிவிடும் என்றே நம்பப்பட்டது.
பிரச்சாரத்தின் ஆரம்பத்தில், தினகரனையும் அவரது ஆதரவாளர்களையும், மக்கள் விரட்டுவதாக சொல்லிக் கொண்டிருந்த நிலையை, தமது பண வீச்சால் முழுமையாக கட்டுப்படுத்தி விட்டார் தினகரன்.

அதனால், அதே மக்கள், பணம் வாங்கிக்கொண்டு தினகரனுக்கு ஆரத்தி எடுத்து, உற்சாக வரவேற்பு கொடுக்கும் அளவுக்கு மாறிப்போனது தேர்தல் களம்.
கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகள், தினகரனுக்கும் திமுகவுக்கும்தான் கடும்போட்டி என்று சொல்லும் அளவுக்கு நிலைமை முற்றிலும் மாறிப்போய் இருந்தது.
அதன் காரணமாகவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து என்று அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், தினகரன் மனம் வெறுத்து போயுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு, மற்ற கட்சிகளுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், கொண்டாடும் அளவுக்கு மகிழ்ச்சி அடைந்திருப்பவர் முதல்வர் எடப்பாடிதான்.
அப்பாடா... தப்பித்தது முதல்வர் பதவி என்ற சந்தோஷத்துடன், அதை ரகசியமாக கொண்டாட எடப்பாடியும் அவரது ஆதரவாளர்களும் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
