சர்கார் பட விவகாரத்தில் ஏ.ஆர்.முருகதாசை போலீசார் தேடி வரும் நிலையில் நடிகர் விஜயும் தனது வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளியன்று வெளியான சர்கார் திரைப்படத்தில் அ.தி.மு.க மற்றும் தி.மு.கவை நேரடியாகவும் மறைமகமாகவும் விமர்சித்து ஏராளமான காட்சிகள் இடம்பெற்றுள்ளனர். அதிலும் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமி கேரக்டருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்று பெயர் வைத்துள்ளனர். இது போதாக்குறைக்கு அரசின் இலவச திட்டங்களுக்கு எதிராக ஆக்ரோசமாக விஜய் வசனம் பேசுவது போன்று காட்சிகள் உள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் ஒரு விரல் புரட்சி என்ற பாடலில் தோன்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் உள்ள இலவச பொருட்களான கிரைன்டர், மிக்சியை ரோட்டில் தூக்கி போட்டு கொளுத்துவது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிக்கு தான் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இலவச பொருட்களுக்கு எதிராக மக்களை தூண்டி வன்முறைக்கு விஜய் வித்திட்டுள்ளதாக சண்முகம் தெரிவித்திருந்தார்.

மேலும் விஜயின் செயல் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் இருந்ததாகவும் சி.வி.சண்முகம் கூறியிருந்தார். அத்துடன் வன்முறையை தூண்டும் வகையில் படம் எடுத்த விஜய், முருகதாஸ் மற்றும் படத்தை வெளியிட்ட திரையரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று சென்னையில் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணனுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

மேலும் திரைப்படங்களில் வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை இடம்பெறச் செய்ததற்காக முருகதாசை கைது செய்ய போலீஸ் முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில் தான் நள்ளிரவில் விருகம்பாக்கத்தில் உள்ள சீப்ரோஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் முருகதாஸ் வீட்டிற்கு போலீஸ் படை சென்றது. அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி எச்சரித்த நிலையில் சுதாரித்துக் கொண்ட முருகதாஸ் வீட்டில் இருந்து வெளியேறி தப்பி ஓடிவிட்டார். 

இதனிடையே அமைச்சர் சி.வி.சண்முகம் விஜய் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் வசனம் பேசியதாக கூறியிருந்தார். இதனால் முருகதாசை தொடர்ந்து போலீசார் தன்னை தேடி வரலாம் என்று விஜய்க்கு தகவல்கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று இரவு கேளம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து நடிகர் விஜய் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நடிகர் விஜய் எங்கு சென்றார் என்கிற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.இதனிடையே நடிகர் விஜய் வீட்டிற்கு அதிகாலை முதலே அவரது ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.