edappadi pazanisami speech in tirunelveli mgr centenary functions
இயக்கம் ஒன்றாக இருக்கக் கூடாது, ஆட்சி நிலைக்கக் கூடாது என பல பேர் கனவு கண்டு வருகின்றனர், அது பலிக்காது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் ரூ. 87.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த விழாவுக்கு சட்டப் பேரவைத் தலைவர் ப. தனபால் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, எம்ஜிஆரின் உருவப் படத்தைத் திறந்து வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ. 118.02 கோடியில் முடிவுற்ற 192 திட்டப் பணிகளைத் திறந்து வைத்தும், ரூ. 528.91 கோடி மதிப்பிலான 142 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.
பின்னர் இந்த விழாவில் அவர் பேசியபோது,
இயக்கம் ஒன்றாக இருக்கக் கூடாது, ஆட்சி நிலைக்கக் கூடாது என பல பேர் கனவு கொண்டு வருகின்றனர். அது பலிக்காது
நானும் துணை முதல்வரும் இரட்டை குழல் துப்பாக்கி போல் செயல்படுவோம் என கூறினேன். இன்று எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம் செய்துள்ளார்.
இந்த ஆட்சி கவிழும் என்ற எதிர்கட்சி தலைவர் கனவு கானல் நீராகப் போகும்
தமிழகத்தில் அடுத்த கட்டமாக ரூ.300 கோடி செலவில் குடிமராமத்து பணிகள் துவங்கப்பட உள்ளது. தமிழகத்தில் அதிக அளவு கல்லூரிகள் திறக்கப்பட்டது இந்த ஆட்சியில் தான்.
தாங்கள் ஆட்சி செய்த காலத்தில் தாங்கள் செய்த பணி என்ன...? மக்கள் நலனுக்காக என்ன செய்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். ஆதலால் எதிர்க்கட்சி குறை கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் சுகாதார துறை தமிழகத்தில் முதன்மை மாநிலமாக செயல்படுகிறது. தொண்டர் கூட உயர்ந்த பதவிக்கு வரக் கூடிய இயக்கம் அதிமுக தான்.
நெல்லை தாளையூத்து முதல் டக்கரம்மாள்புரம் வரை இரு வழிச் சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்படும். திசையன்விளையில் புதிய வட்டம் அமைக்கப்படும். கடையம் இராமநதி கடனாநதி அணைகள் தூர்வாரப்படும். இராமநதி மேல்மட்ட கால்வாய் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும்.
திசையன்விளையில் பல்நோக்கு சமுதாய நலக் கூடம் கட்டப்படும். ஆரல்வாய்மொழி பணகுடி ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும். தடுப்பணைகளில் சேமிக்கப்படும் நீர் விவசாயம், குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும். அரசு மீது குறை சொல்வதை மட்டுமே தொழிலாக திமுக செய்து வருகிறது. .. என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.
மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள கோயில்களை தெரிந்து கொள்ளும் வகையில் 'talking temples of tirunelveli' என்ற புதிய செயலியை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.
