திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் முதலமைச்சரின் காருக்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எதையோ தூக்கி வீசினார். இதனால் பரபரப்பு ஏற்பட,  உடனடியாக விட்3ரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை மடக்கி பிடித்தனர். அவர் நீடாமங்கலத்தில் பழ வியாபாரம் செய்து வரும் செல்வராஜ் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், “முதலமைச்சரிடம் மனு கொடுக்க வந்தேன், கூட்டம் அதிகமாக இருந்ததால் டிரைவர் சீட் வழியாக உள்ளே தூக்கிப் போட்டேன்” என மிகவும் வெகுளியாக பதில் கூற, அதிகாரிகள் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

தஞ்சாவூர் செல்லும் வழியில் கடிதத்தை பிரித்து பார்த்த முதலமைச்சர் அவரை அழைத்து வரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக நீடாமங்கலம் விரைந்த அதிகாரிகள் செல்வராஜை தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு செல்வராஜை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  “கடிதத்தை கையில் தான் கொடுக்க வேண்டும்... தூக்கி எல்லாம் வீசக்கூடாது” என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். 

இதையடுத்து செல்வராஜிடம் அந்த கடிதத்தில் என்ன தான் எழுதி இருந்தார் என கேட்டதற்கு, அவர் கூறிய பதில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. “திருச்செந்தூரில் ஆட்சி புரிகின்ற தமிழ் கடவுளான முருகனுக்கு பல பெயர்கள் உண்டு. அதில் பழனிசாமி என்ற பெயரும் உண்டு. அந்த காரணத்தால் தான் நீங்கள் முதலமைச்சராக பதவியேற்றீர்கள். அடுத்த 5 ஆண்டிற்கும் நீங்கள் தான் முதலமைச்சராக ஆட்சி பீடத்தில் அமர்வீர்கள்” என அந்த கடிதத்தில் எனது அருள் வாக்கு குறித்து எழுதி இருந்தேன் என்கிறார் செல்வராஜ்.

கண்டிப்பாக அடுத்த ஆண்டும் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக ஆட்சி பீடத்தில் அமர்வார் என அடித்துக்கூறும் செல்வராஜ், தனக்கு வரப்போவதை முன்கூட்டியே கணிக்கும் சக்தி உள்ளதாக சொல்கிறார். ‘2019 ஜனவரி மாதம் சாலை விபத்து ஒன்றில் சிக்கிய செல்வராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். அதை தனது மறுபிறவியாக கருதும் இவர், அன்று முதல் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்கள் தனக்கு முன்கூட்டியே தெரிய ஆரம்பித்ததாகவும், அப்படித்தான் எடப்பாடியாரே மீண்டும் முதலமைச்சர் ஆவார்’ என அருள்வாக்கு கூறியதாக சொல்கிறார். 

உலக அளவில் மனிதர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் என்பதும் தனக்கு முன்னதாகவே தெரியும் என்றும், அதை கூறினால் யாரும் நம்பமாட்டார்கள் என்பதற்காக வெளியில் சொல்லவில்லை என்றும் கூறுகிறார். திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கும், சிவப்பெருமானுக்கும், திருச்சி மலைக்கோட்டையில் இருக்கும் விநாயகருக்கும், சமயபுரம் மாரியம்மனுக்கும் யாகம் ஒன்றை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்துள்ளார். செல்வராஜ் மனதில் பட்டதாக கூறும் பல விஷயங்கள் உண்மையில் நடந்துள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. காருக்குள் கடிதம் வீசிய நபரை அதிகாரிகள் அழைத்துச் சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முதலமைச்சர் எடப்பாடியாரோ அந்த பழ வியாபாரிடம் பரிவுடன் நடந்து கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.