சேலத்தில் நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஓட்டுக்கு பணம் கொடுப்பது போன்று வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். 

சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாநகரப் பகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். சேலம் டவுன் பட்டைக்கோயிலிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர், பல்வேறு பகுதிகளில் தெருத்தெருவாக நடந்து சென்று ஆதரவு கோரினார். பட்டைக்கோயில், சின்னக்கடைவீதியில் ஒவ்வொரு கடையாக சென்ற முதல்வர், வியாபாரிகளிடம், வியாபாரம் எப்படி உள்ளது? என விசாரித்தார். சாலையோர டீக்கடைக்கு சென்ற அவர், காபி கொடுக்குமாறு கேட்டார். முதல்வர் காபி குடித்தவாறே, நாளொன்றுக்கு எவ்வளவு வியாபாரம் ஆகிறது? எவ்வளவு லாபம் கிடைக்கிறது? எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள்? என்று கேட்டறிந்தார்.

 

 இதனையடுத்து பழக்கடை வியாபாரி பெண்ணிடம் அவர் நோட்டீஸ் கொடுத்து வணக்கம் சொல்லி இருக்கிறார். அப்போது பின்னால் இருந்த தொண்டர் ஒருவர் பழனிச்சாமியிடம் பணம் கொடுத்தார். அதை வாங்கி அந்த பெண்ணிடம் அப்படியே முதல்வர் அளித்துள்ளார். இது வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார். அதில் நான் சேலத்தில் நடத்து கடைகளில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.. அப்போது ஒரு பழக்கடையில் வாக்கு கேட்டேன். அப்போது அந்த பெண்மணி எனக்கு ஒரு சீப்பு பழம் கொடுத்தார். அவர் எனக்கு பழம் கொடுத்த காரணத்தால் அதற்கு உரிய பணத்தை கொடுத்தேன். ஆனால் பழம் வாங்கியதை காட்டாமல், பணம் கொடுத்த காட்சியை மட்டும் காட்டியுள்ளனர் எனக்கு எதுவாக இருந்தாலும் காசு கொடுத்து வாங்குவதுதான் வழக்கம். அதனால்தான் பணம் கொடுத்தேன். மேலும் திமுக போன்று பிரியாணி சாப்பிட்டுவிட்டு நான் எதையும் இலவசமாக வாங்குவதில்லை என விமர்னம் செய்துள்ளார்.  

வேலூர் தேர்தல் ரத்து செய்தது குறித்துப் பேசிய அவர், தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கக் கூடாது, தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.