மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தென் மாவட்டங்களில் 2 நாட்கள் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து மிகப்பெரிய அளவில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கியுள்ள இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, தங்கமணி உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

நேற்றைய தினம் ஓ பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ. ராஜா, வி.கே. சசிகலாவை திருச்செந்தூரில் சந்தித்தார். சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த ஓ ராஜாவை ஓபிஎஸ்- இபிஎஸ் இணைந்து கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர். தேனி மாவட்ட அதிமுகவினர், முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜா உள்ளிட்டோர் சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுகுறித்து பேசிய முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி, ‘தொடர் தோல்விகளால் அதிமுக துவண்டு போய் இருக்கிறது. அதிமுக தற்போது அவசர சிகிச்சை பிரிவில் போராடிக் கொண்டு இருக்கிறது.

தேனி மாவட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஓ.பன்னீர் செல்வத்துக்குக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. சசிகலாவால் பதவியை பெற்ற எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு அவரை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்? என்பது புரியவில்லை. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி போன்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்’ என்று கூறியிருக்கிறார் புகழேந்தி.
