இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுகாதாரம் தொடர்பான பல்வேறு முன்னேற்றங்களையும், தொழில்நுட்பங்களையும் வெளிநாடுகளிலிருந்து அறிந்து கொண்டு தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று தமிழ்நாட்டை மேலும் வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லவும் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 28 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர், லண்டன் சென்றடைகிறார். அங்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணத்தரத்தின் மேம்பாடுகளை கண்டறிந்து, அதனை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில், சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினரைச் சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும்.

இங்கிலாந்தில் செயல்படுத்தப்படும் அவசர ஆம்புலன்ஸ் சேவையை பார்வையிட்டும், மலேரியா போன்ற தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் கையாளும் வழிமுறைகளை அறிந்து தமிழ்நாட்டில் அந்நோய்களை கட்டுப்படுத்த அந்நிறுவனத்துடன் ஓர் நோக்க அறிக்கை கையெழுத்திடும் நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை தமிழ்நாட்டில் தனது கிளையை நிறுவ அம்மருத்துமவனையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுகிறார்.
சஃபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச் - ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின் கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில்நுட்பத்தை அறிந்து கொள்கிறார்.

செப்டம்பர் 2 ஆம் தேதி நியூயார்க் சென்றடையும் முதலமைச்சர் பழனிசாமி, அங்கு அமெரிக்க தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து அமெரிக்க வாழ் தமிழ் மக்களிடம் கலந்துரையாட  உள்ளார்.

பின்னர் அங்கிருந்து சான்ஹுசெ சென்று, அங்குள்ள அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகள் ஆகியோரை சந்திக்கிறார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவிற்கு தேவைப்படும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள, பஃபல்லோ மற்றும் கலிபோர்னியாவில் உள்ள கால்நடை பண்ணைகளை பார்வையிட உள்ளார்.

செப்டம்பர் 7 ஆம் தேதி அன்று அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் வழியில் செப்டம்பர் 8 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதி ஆகிய நாட்களில் துபாயில் ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறையின் கீழ் இயங்கும் பிசினஸ் லீடர்ஸ் ஃபோரம் என்ற அமைப்பும், இந்திய தூதரகமும் இணைந்து நடத்தும் துபாய் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் ஒரு சிறப்பு விருந்தினராக பங்கேறகிறார்.

செப்டம்பர் 10 ஆம் தேதி முதலமைச்சர் தமிழ்நாடு திரும்புவதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.