தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த வாரம் இறுதியில் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ள நிலையில், அவருடைய பொறுப்புகளை யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அந்த பொறுப்புகளை கவனிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29-ம் தேதி அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செல்கிறார். அவருடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழில் துறை அமைச்சர் சம்பத், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் உள்ளிட்டவர்கள் மற்றும் அந்த துறை செயலாளர்கள், அதிகாரிகளும் செல்கின்றனர். மீண்டும் செப்டம்பர் 9-ம் தேதி அன்றுதான் அவர் சென்னை திரும்ப உள்ளார். 

இந்நிலையில், முதல்வர் வெளிநாடு செல்வது குறித்தும், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் முதல்வர் யார் யாரை சந்தித்து தமிழகத்திற்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச இருக்கிறார் என்பது பற்றியும் விவாதிக்க, தமிழக அமைச்சரவை கூட்டம் இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது. தற்போது முதல்வர் சேலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நாளை இரவு சென்னை திரும்புகிறார். அவர் சென்னை திரும்பியதும், அமைச்சரவை கூடும் தேதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். 

வழக்கமாக, மாநிலத்தின் முதல்வர் வெளிநாட்டுக்கு செல்லும்போது பொறுப்பு முதல்வர் ஒருவரை அறிவித்து, அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு செல்வது வழக்கம். அந்த வகையில் துணை முதல்வராக இருக்கக்கூடிய ஓபிஎஸ்ஸிடம் பொறுப்புகளை எடப்பாடி பழனிச்சாமி ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவரிடம் ஒப்படைக்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மாறாக, எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவரும், நம்பிக்கைக்குரியவருமான எஸ்.பி.வேலுமணியில் ஒப்படைத்து செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்திலிருந்து அனுமதி கிடைத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.