முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் முதல்முறையாக அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டனை அதிரடியாக நீக்கினார். இதனையடுத்து, ஜெயலலிதா பாணியில் அதிரடி நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவிட்டார் என அதிமுகவில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், சில அமைச்சர்களை நீக்க உள்ளதாகவும் தகவல் வெளியானதால் அமைச்சர்களும் பீதியில் இருந்து வந்தனர். 

இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் முதல்வரை சந்திக்கும் எண்ணமில்லை எனவும் கூறிவந்தார். இதனிடையே, தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முதல் அமைச்சரை சந்திக்க வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதற்கு முதல்வர் பழனிச்சாமி மறுத்து வருவதால் அவர் மீது மணிகண்டன் கடும் கோபத்தில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், டென்ஷனில் உள்ள மணிகண்டன் முதல்வருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை டெல்லிக்கு அனுப்பி வைப்பேன் என கூறி வருகிறாராம். முக்கியமாக எடப்பாடிக்கு நெருங்கிய 2 கொங்கு மண்டல அமைச்சர்களின் சொத்து விவரங்களையும் ஆதாரத்துடன் அளிப்பேன் என்று கூறியுள்ளார்.  இதனால், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும் பீதி அடைந்துள்ளனர். 

இதனிடையே, மணிகண்டன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. எடப்பாடி பழனிசாமி தன்னை அரவணைக்காவிட்டால் திமுகவில் இணைவதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டமாக உள்ளாராம். அதிமுகவில் இருக்கும்போதே மிரட்டும் மணிகண்டன் திமுகவுக்கு தாவி விட்டால் அதிமுகவின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிவிடுவார் என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பீதியில் உள்ளார்.