கடந்த சில நாட்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சிகள் அனைத்திலும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பிரதான இடம் வழங்கப்பட்டு வருகிறது.

ஓபிஎஸ் அணி – ஈபிஎஸ் அணி இணைப்பிற்கு பிறகு சிறிது நாட்கள் அவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் சேர்ந்து கலந்து கொண்டனர். பிறகு அரசு விழாக்களில் மிக மிக முக்கியமான விழாவிற்கு மட்டுமே ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கட்சி நிகழ்ச்சிகளில் எப்போதும் இருவரும் சேர்ந்து கலந்து கொண்டனர்.

ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் துறை சார்ந்த நிகழ்ச்சிகளை அவர் தனிப்பட்ட முறையில் நடத்திக் கொண்டார். இதே போல் எடப்பாடியும் கூட முக்கிய திட்டங்கள் துவக்க விழாவை தன்னிச்சையாக துறை சார்ந்த அமைச்சர்களுடன் மேற்கொண்டார். ஓபிஎஸ்க்கு இந்த நிகழ்ச்சிகளுக்கு எடப்பாடி தரப்பு அழைப்பு விடுக்காமல் இருந்தது.

இதே போல் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நடத்தும் ஆலோசனைகளுக்கு முன்பெல்லாம் ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இடையில் அழைப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக முதலமைச்சரின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஓபிஎஸ்சை காண முடிகிறது. தலைமைச் செயலகத்தில் பேருந்துகள் துவக்க விழா தொடங்கி மாமல்லபுரத்தில் நேற்று முதலமைச்சர் நடத்திய ஆய்வு வரை அனைத்திலும் ஓபிஎஸ் உடன் இருந்தார்.

 

இதனை பார்த்த அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ் ஏன் திடீரென எடப்பாடியை இப்படி நிழல் போல் தொடர்கிறார் என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இது குறித்து விசாரித்த போது தமிழக அரசின் சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தற்போது ஓபிஎஸ் தவறாமல் அழைக்கப்படுவதாக கூறுகிறார்கள். ஓபிஎஸ்சும் அந்த நிகழ்ச்சியில் முதல் ஆளாக வந்து கலந்து கொள்வதாக சொல்கிறார்கள்.

இதற்கு எல்லாம் காரணம் டெல்லியில் இருந்து வந்த உத்தரவு தான் என்றும் அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் இயல்பான ஒரு விஷயத்தை கண் காது வைத்து பேச வேண்டாம் என்று கோட்டையில் உள்ள அரசு அதிகாரிகள் கூறிவிட்டு செல்கின்றனர்.