சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நான்கு ஏரிகளும் வறண்டு விட்டன. ஆனாலும் சென்னை மக்களுக்கு தேவையான நீரை கொடுத்து வருகிறோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் காலி குடங்களுடன் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஓட்டல்கள், பல்வேறு ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தண்ணீர்த் தட்டுப்பாடு தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கூட்டமானது திடீரென ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நான்கு ஏரிகளும் வறண்டு விட்டன. ஆனாலும் சென்னை மக்களுக்கு தேவையான நீரை கொடுத்து வருகிறோம். முடிந்த அளவுக்கு துரித நடவடிக்கை எடுத்து உரிய நீர் வழங்கப்படுகிறது. அதிகாரிகள் நியமனம் செய்து குடிநீர் பிரச்னையை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் வந்ததால் அரசு செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால், நடத்தை விதிகள் முடிந்ததும் உடனடியாக கூட்டம் போட்டு, நிதி ஒதுக்கி குடிநீர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டோம் என்றார். 

மேலும் அவர் பேசுகையில், அமைச்சர் வீட்டுக்கு தனியாக 2 லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறுவது தவறான தகவல். முதலமைச்சர் வீடு என்றால் அங்கு வரும் பல்வேறு அதிகாரிகள், பார்வையாளர்களுக்கும் சேர்த்துதான் தண்ணீர் செலவாகிறது. முதலமைச்சரோ, அமைச்சரோ மட்டும் 2 லாரி தண்ணீரை செலவிட முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முன்வந்த கேரள முதல்வருக்கு எடப்பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க கேரள அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.