த.மா.கா தலைவர் ஜிகே வாசனை தொலைபேசியில் அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசியது தான் அதிமுக கூட்டணியின் ஹாட் டாபிக்.

பொதுவாக தேர்தல் சமயத்தில் மட்டுமே கூட்டணி கட்சிகளை மதிக்கும் பாரம்பரியம் கொண்டது அதிமுக. அதிலும் ஜெயலலிதா மக்கள் தலைவரான பிறகு கூட்டணி கட்சிகளை பெரிய அளவில் கண்டு கொள்வதில்லை. தேர்தல் சமயத்தில் அவர்களோடு இணக்கமாக இருப்பதோடு சரி, இணைந்து பிரச்சாரம் செய்வதில் கூட ஜெயலலிதா ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் தேர்தல் முடிந்த கையோடு கூட்டணியும் உடைவது அதிமுகவில் சர்வசாதரணம்.

ஆனால் தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ராஜ மரியாதை கிடைத்துக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும் கூட கூட்டணி உடன்பாட்டின் போது கூறியபடி பாமகவிற்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை கொடுத்து அழகு பார்த்தது அதிமுக. இதே போல் உள்ளாட்சித் தேர்தலிலும் கூட எந்த கூட்டணி கட்சியின் முகமும் நோகாதபடி இடப்பங்கீட்டை முடித்தது அதிமுக.

இதற்கு கூட்டணி கட்சியினரை அரவணைத்துச் செல்லும் எடப்பாடி பழனிசாமி தான் முக்கிய காரணம் என்கிறார்கள். சட்டமன்ற தேர்தல் வரை இந்த கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். கூட்டணியில் பெரிய கட்சியாக இருக்கும் பாமக முதல்சிறிய கட்சியான தமாகா வரை அனைவரையும் எடப்பாடியார் அரவணைத்துச் செல்கிறார் என்று கூறுகிறார்கள்.

இதனை நிருபிக்கும் வகையில் தான் ஜி.கே. வாசனை இன்று தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. எப்போதுமே தனது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடக் கூடியவர் வாசன். ஆனால் இந்த முறை அரசியலில் பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்காத நிலையில் வாசன் தரப்பு அடக்கியே வாசித்தது. ஆனால் சேலத்தில் இருந்து சென்னை புறப்படும் முன்பு திடீரென வாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட எடப்பாடியார் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இப்படி ஒரு வாழ்த்தை வாசன் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். மாற்று கட்சியினரை இப்படி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறி அசர வைப்பது கலைஞர் ஸ்டைல் பாலிடிக்ஸ். அதே பாணியில் எடப்பாடியில் கூட்டணி கட்சியினரை அணுக ஆரம்பித்துள்ளது புதிய வழக்கமாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.