பதினெட்டு பேரோட முடிந்தது இந்த ‘தகுதி நீக்க பஞ்சாயத்து’ என்று நினைத்தால், எடப்பாடியாரோ இதை தொடர் கதையாக்கி மேலும் மூணு பேருக்கு இதே போல் செக் வைப்பார் போல தெரிகிறது! என்று அடுத்த அதிர்ச்சியை கிளப்புகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கூடவே கருணாஸுக்கும் இந்த தகவல் குளிர்காய்ச்சலை கிளப்பியிருக்கிறது. 

பிரச்னை என்னவாம்?.... தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்த வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரட்டை நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருந்தனர். அப்போது ஒருவர் தகுதி நீக்கம் செல்லும்! என்றும் மற்றொருவர் செல்லாது! என்றும் வழங்கியதால் மூன்றாவது நீதிபதிக்கு சென்றது வழக்கு. இன்று மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வர இருந்தது! இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தினகரன் தரப்பு ‘எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும்!’ என்று அதீத நம்பிக்கையுடன் பேசி நடமாடிக் கொண்டிருந்தது. ஆனால் இன்று வந்த தீர்ப்போ சபாநாயகரின் முடிவு செல்லும்! என சொல்லி தினகரன் தரப்புக்கு செம்ம செக் வைத்துவிட்டது. 

இதனால் தினகரன் கூடாரம் கலகலத்துக் கிடக்கிறது. பதவி பறிபோன பதினெட்டு எம்.எல்.ஏ.க்களும் பெங்களூரு சென்று பரப்பன சிறையில் சசியை சந்தித்து, அதன் பின்  இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வது பற்றி முடிவெடுக்கப்போவதாக தங்கதமிழ்செல்வன் சொல்லி வருகிறார் இப்போது. இந்நிலையில் ‘எடப்பாடி தரப்பு இந்த 18 பேருக்கு அதிகாரத்தை  பிடுங்கிவிட்டு டம்மியாக்கியதோடு முடித்துக் கொள்ளவில்லை. இன்னும் 4 பேர் எடப்பாடியாரின் ஹிட் லிஸ்டில் இருக்கிறார்கள்.’ என்று திரி கொளுத்தி இருக்கிறார்கள். 

யார் அந்த 3 பேர்?..கள்ளக்குறிச்சி பிரபு, திட்டக்குடி கலைசெல்வன் மற்றும் அறந்தாங்கி ரத்தின சபாபதி ஆகியோர்தான் என்கிறார்கள். இந்த பதினெட்டு பேர் ஸ்டைலிலேயே இவர்களுக்கும் வலுவான புகார்களுடன் ஆப்பு ரெடி! என்று ராயப்பேட்டை அலுவலக சைடிலிருந்து ஒரு சைரன் கேட்கிறது. இதனால் நொந்து கிடக்கின்றனர் அந்த மூன்று பேரும். இந்நிலையில் இந்த தகவலை கேள்விப்பட்டு  சமீபத்தில் முதல்வரை தாறுமாறாக பேசி சிறைக்கு டூர் சென்று வந்த எம்.எல்.ஏ. கருணாஸ் எம்.எல்.ஏ.வும் கலங்கிக் கிடக்கிறாராம். தனக்கும் இதே போல் ரிவிட் ரெடி! என்று கோட்டையின் உள்வட்டாரத்திலிருந்து ஒரு தகவலை ஸ்மெல் செய்த பிறகே இந்த நடுக்கமாம். 

 இதைத் தொடர்ந்து தனக்கு நெருங்கிய நபர்களிடம் ’எங்கப்பா எப்பவுமே சொல்வாரு, டேய் உனக்கு வாயில வாஸ்து சரியில்லை!ன்னு. அது உண்மையாகிடுச்சு பார்த்தீங்களா! ஏதோ அம்மா, சின்னம்மா புண்ணியத்துல நானெல்லாம் கட்சி துவங்குனதுமே எம்.எல்.ஏ.வானேன். இனியெல்லாம் அப்படியொரு சம்பவம் என் வாழ்க்கையில நடக்குமா? நல்ல வாய்ப்பை நானே கெடுத்துக்கிட்டேன். ஓட்டு போட்ட மக்களுக்கும் ஒண்ணும் பண்ண முடியல, நானும் உருப்படியா அரசியல் பண்ண முடியல.” என்று புலம்பிக் கொட்டி வருகிறாராம். கஷ்டம்யா!