Asianet News TamilAsianet News Tamil

நான்கு கால்களால் தவழ்ந்து வந்த முதல்வருக்கு வரலாறு பத்தி ஒண்ணும் தெரியாது... மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!

அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு பற்றி முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் ஒருவாரத்தில் பாராட்டு விழா நடத்த தயார் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

Edappadi palanisamy foreign tour issue...mk stalin
Author
Tamil Nadu, First Published Sep 10, 2019, 4:24 PM IST

அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு பற்றி முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் ஒருவாரத்தில் பாராட்டு விழா நடத்த தயார் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- வெளிநாடுகளின் முதலீடுகளைப் பெறப் போகிறோம் என்று சொல்லி வீராப்புடன் சென்று வெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பயணம் மன ரீதியாக ஏற்படுத்தியுள்ள கோணலால், விரக்தியின் உச்சத்திற்கே சென்று, “ஸ்டாலின் தான் நினைத்ததை நடத்த முடியாத காரணத்தால் என் மீது எரிச்சலும், பொறாமையும் கொண்டு பேசி வருகிறார்” எனப் பேட்டியளித்திருப்பது, “பாடத் தெரியாமல் பக்க வாத்தியத்தில் குறை” கூறியது போன்ற பைத்தியக்காரத்தனமானது. Edappadi palanisamy foreign tour issue...mk stalin

பதிமூன்று நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு வந்திருக்கும் முதலமைச்சருக்கு, 'கட்சி நிதியிலிருந்து கொடுப்பதுபோல் விளம்பரங்களை அரசு நிதியிலிருந்து கொடுத்திருந்ததைப் பார்த்த மயக்கத்தில் என் மீது பாய்ந்திருக்கிறார். அரசுப் பணத்தில் இத்தகைய விளம்பரங்களை வெளியிடுவது நிதி ஒழுங்கீனம் என்பதை உடன் சென்ற தலைமைச் செயலாளர் உணர்த்தியிருக்க வேண்டும். தமிழகத்தில் இன்றைக்குள்ள தொழிற்சாலைகளும், மாநிலத்திற்கு கிடைத்த நேரடி அந்நிய முதலீடுகளும் தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்டவை என்ற அடிப்படை விவரத்தைக் கூட 'விளம்பர மோகத்தில்' அவர் மறந்திருக்கிறார் அல்லது மறைத்திருக்கிறார்!
 
அவருடன் சென்ற தலைமைச் செயலாளரே துபாயில், தி.மு.க ஆட்சியில் கிடைத்த அந்நிய முதலீடுகளையும் சேர்த்து அங்குள்ள தொழிலதிபர்களிடம் தமிழகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டி முதலீடு கோரியிருக்கின்ற நிலையிலும், பக்கத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க ஆட்சியில் தமிழகம் கண்ட தொழில் வளர்ச்சி தெரியாமலும் புரியாமலும் விமான நிலையத்தில் பேட்டி அளித்திருக்கிறார். தி.மு.க ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டுமுறை நடத்தாமல், 'விளம்பர மேளா' இல்லாமல், இதுபோன்று அரை டஜன் அமைச்சர்களும், முதலமைச்சரும், ரத கஜ துரக பதாதிகளுடன் படையெடுத்துச் செல்லாமல், தமிழகம் முதலீட்டுக்குத் தக்க இடம் என்றிருந்ததால், தானாக வந்த முதலீடுகளால், இன்றைக்கு தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், அம்பத்தூர் முதல் காஞ்சிபுரம் வரையிலும் தொழிற்சாலைகள் அணி வகுத்து நிற்கின்றன. Edappadi palanisamy foreign tour issue...mk stalin

தி.மு.க ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் 46,091 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு 2.21 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது. முதலமைச்சர் பொறுப்பிலிருந்த தலைவர் கலைஞர் அவர்களும், தொழிற்துறை அமைச்சராக என் நிர்வாகத்திலும், 'வெளிப்படையாகவும், விரைவாகவும் முடிவெடுத்தல்', 'ஒற்றைச் சாளர முறையில் தொழிற்சாலைகளுக்கு அனுமதியளித்தல்' உள்ளிட்ட 'கமிஷன் இல்லாத அனுமதிகள்' மூலம் தொழிற்சாலைகள் தமிழகத்தில் பெருகின. இந்த மாநிலமே இந்திய நாட்டில் 'வளர்ச்சியின் நட்சத்திரமாக' (Growth Star) விளங்கியது.

இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பித் தேர்வு செய்து முதலீடு செய்யும் முதன்மை மாநிலமாக தி.மு.க ஆட்சியில்தான் விளங்கியது என்ற அடிப்படை விவரம் கூட அவசரத்திலும் - அரசியல் விபத்தின் காரணமாகவும், இரு கைகள் இரு கால்கள் - ஆக நான்கு கால்களால் தவழ்ந்து சென்று, முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை என்பது பரிதாபம்தான்.

2015-ல் நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை காணவில்லை; கானல் நீராகிப் போனது. 2019ல் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்றே தெரியவில்லை; காற்றில் கறைந்து விட்டதோ? தமிழகத்தில் தொழில் துவங்க வந்த முதலீட்டாளர்கள் ஏன் வெளிமாநிலங்களுக்குச் சென்றார்கள் என்ற விவரமும் வெளியாகவில்லை. “கியா” மோட்டார் முதலீட்டாளர்களைக் கேட்டால் பல ரகசியங்களை வெளியிடுவார்கள். Edappadi palanisamy foreign tour issue...mk stalin

இப்போது போட்டுள்ளதாகக் கூறப்படும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன ஆகுமோ என்றும் தெரியவில்லை. அரசு கஜானாவில் பணம் எடுத்து அ.தி.மு.க ஆட்சியில் நடந்த, உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 'இவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன' என்று சட்டமன்றத்தில் ஒரு வெள்ளையறிக்கை வைக்கக் கூடத் துப்பில்லாத முதலமைச்சர், இன்றைக்கு 'எனக்கு ஏதோ போட்டி பொறாமை' என்று பேட்டியளிப்பது, வெளிநாட்டுப் பயணத்தில் அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஏமாற்றத்தின் அல்லது படுதோல்வி மனப்பான்மையின் வெளிப்பாடு மட்டுமல்ல - அவர் வெளிநாட்டிற்கு முதலீடு திரட்டப் போகவில்லை என்பதைக் காட்டுகிறது.

ஆடம்பர 'வெளிநாட்டு சுற்றுலா' நடத்திவிட்டு, 'ஹீரோ'வாக வேஷம் கட்டிக்கொண்டு வரலாம் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு சென்றவர் - அமைச்சர்கள் கோபித்துக்கொண்டு தன் பதவிக்கு எங்கே வேட்டு வைத்து விடப் போகிறார்களோ என்று சந்தேகம் கொண்டு, அந்த மிரட்சியில், அவர்களுக்கும் வெளிநாடு சுற்றுலா செல்ல தாராளமாக அனுமதி அளித்து விட்டு, 'முதலீடு பெறச் சென்றோம்' என்று முதலமைச்சர் சொல்வதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. அரசு நிதியை சொந்த நிதிபோல் பயன்படுத்தி விட்டுத் திரும்பியிருக்கும் அமைச்சர்களும், முதலமைச்சரும் நிச்சயம் ஒரு நாள் தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும். Edappadi palanisamy foreign tour issue...mk stalin

எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டன என்பதையெல்லாம் விரிவான வெள்ளை அறிக்கையாக உருவாக்கி, இதோ பிடியுங்கள் நீங்கள் கேட்கும் வெள்ளை அறிக்கை" என்று வெளியிடத் தயாரா? அப்படி உண்மைகளை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு தி.மு.க சார்பில் 'பாராட்டு விழா' நடத்தத் தயாராக இருக்கிறேன். என் சவாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளத் தயாரா? இரண்டு நாட்களில் தமிழக மக்களுக்குப் பதில் வேண்டும்; இல்லாவிட்டால், முதலமைச்சரின் வெளிநாடுகள் பயணம் மர்மங்கள் நிறைந்தது என்று ஊர் முழுவதும் பேசிக் கொள்வது உண்மைதான் என்று உறுதியாகிவிடும். சிலரை பலநாள் ஏமாற்றலாம்; பலரைச் சிலநாள் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்றிவிட முடியாது என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios