Edappadi palanisamy execute Panneerselvam master plan

காலம் காலமாகவே பிணத்தை வைத்து அரசியல் செய்வது, அதிமுகவுக்கு கைவந்த கலை. அரசியலில் ஒருவரைத் தூக்கி நிறுத்துவதும், குழி தோண்டிப் புதைப்பதும் என... அதிமுக.,வுக்கு நீண்ட அரசியல் வரலாறு உள்ளது. 

எம்.ஜி.ஆர் இறந்த போது, பதவிக்கு ஆசைப்பட்டு ஜானகி மோரில் விஷம் கலந்து கொடுத்து தலைவரை கொன்று விட்டார் என அப்போது தர்மயுத்தம் தொடங்கினார் ஜெயலலிதா ( பன்னீர்செல்வம் போல அல்ல ) . அதன் பிறகு ராஜீவ்காந்தி இறந்த போது அதை வைத்துக் கிடைத்த அனுதாப அலையில் தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் ஜெயலலிதா.

கடந்த ஆண்டு அப்பல்லோவில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா இறந்து விட்ட நிலையில் முதல்வராகப் பொறுப்பேற்ற பன்னீரை அடுத்த சில நாட்களிலேயே ஆட்சியிலிருந்த்து இறக்கிவிட்டதன் விளைவாக ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தர்மயுத்தத்தை தொடங்கினார் பன்னீர்செல்வம். 

தர்மயுத்தம் செய்யத் தயாரான ’கேப்பில்’, சசியின் புண்ணியத்தில் கூவத்தூரில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி விசுவாசமாக இருப்பார் என எண்ணினார்கள் மன்னார்குடி குடும்பத்தினர். 

ஆனால் தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பி.எஸ் கட்சிச் சின்னம், கொடி எங்களுக்குத்தான் சொந்தம் என உரிமை கோரி, லாரி லாரியாக ஆவணங்களை லோடு ஏத்திக் கொண்டு டெல்லி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைத்தார். 

கட்சி, கொடி எனக்கு உனக்கு என போட்டி போட்டுக்கொண்டிருந்த வேளையில் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே நகரில் நடக்கவிருந்த தேர்தலில் தினகரனுக்கு தொப்பி போட்டு, தர்மயுத்த தலைவருக்கு கரன்ட்டு கம்பத்தையும் கொடுத்து வழியனுப்பி வைத்தது தேர்தல் ஆணையம்.

இதனையடுத்து ஒரு வாக்காளருக்கு 4,000 ரூபாய் வரை வழங்க ஒரு பலே பிளான் போடப்பட்டு, தொகுதியைப் பாகம் பாகமாகப் பிரித்து, 85 சதவிகித வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி 89 கோடி ரூபாய் வரை செலவிட கணக்கிட்டுள்ளதாகவும் வந்த தகவலால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனையடுத்து திகாருக்குச் சென்ற தினகரன் எடப்பாடியிடம் நான் திகாரிலிருந்து வருவதற்குள் டெல்லியுடன் கைகோர்த்திருக்கும் தர்மயுத்த தலைவருடன் கைகோர்த்து கட்சியையும் சின்னத்தையும் மீட்டெடுக்க, கட்டளையிட்டார். ஆனால் அவர் திகாரில் இருந்து திரும்பி வருவதற்குள் இருவரும் சேரவில்லை, காரணம் கட்சியில் பதவி, ஆட்சியில் பங்கு என்ற திட்டத்தால் இழுபறி இழுபறியாகவே இருந்துள்ளது.

அது மட்டுமல்ல... இந்த இரண்டு கோஷ்டியும் இனியும் மன்னார்குடி குடும்ப கட்டுப்பாட்டில் இருந்தால், மக்களுக்கு அது தேவையில்லாத எரிச்சலை ஏற்படுத்தும்; அதனால் சசி குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நாம் இணைவோம் என்று தினகரனுக்கு அல்வா கொடுத்துவிட்டு இரண்டு கோஷ்டியும் ஒன்று சேர்ந்தது. ( கைபிடித்து கோத்து வெச்சவர் நம்ம பொறுப்பு ஆளுநர்தான்)

இதனையடுத்து கடுப்பான திகார் நாயகனோ, தனக்கு ஆதரவான எம்.எல்.ஏக்களை கூட்டிக்கொண்டு மினி கூவத்தூரை உருவாக்கினார். இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத இணைந்த கைகள் தீனாவின் விசுவாசிகளை விரட்டி விரட்டி வேட்டையாடியது. 

அதாவது செந்தில்பாலாஜி, பழனியப்பன் என முன்னாள் அமைச்சர்களின் பழைய கேஸ்களை தூசு தட்டியது. 

ஒட்டு மொத்தமாக எல்லோரையும் தகுதி நீக்கம் செய்தது. ஆனாலும் ஆட்டம் குறையாத தினகரன் அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்ற இந்த வேளையில்தான் ஜெயலலிதாவின் மரண விவகாரத்தை வைத்து அவரை சிறையில் வைக்க ஒபிஎஸ் - இபிஎஸ் சதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சசிகலா குடும்பத்தின் மீதான அரசியல் பழிவாங்கல்களின் ஓர் அங்கமாக சொல்லப்படுகிறது.

இந்த கேப்பில், அமைச்சர்களை ட்ரிகர் பண்ணுவதாக எடப்பாடியின் வழிகாட்டலில், ஜெயலலிதா அப்போலோவில் இட்லியே சாப்பிடவில்லை… நாங்கள் பொய் சொன்னோம் என்று வான்டடாக சீனுக்குள் வந்தார் சீனிவாசன். 

ஜெயலலிதாவை நாங்கள் பார்க்க மட்டுமே செய்தோம் என்று மற்ற அமைச்சர்களும் மறுக்க, ஜெயலலிதா உண்மையில் இட்லி சாப்பிட்டாரா? இல்லை அந்த இட்லியை சாப்பிட்டது யார்? என்ற கேள்விகளுடன் தமிழக மக்களும் தொலைக்காட்சி முன் பிரேக்கிங்காக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து, ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் எழுந்த சர்ச்சைகள் குறித்து விசாரிக்க, நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் மூன்றே மாதத்திற்குள் தன் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவு வேறு!

இந்நிலையில், 2016 செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட நோயாளியின் உடல்நிலை அறிக்கை (patient care report) குறித்து பரவலாகப் பேசப்பட்டது. அந்த அறிக்கையில் ஜெயலலிதா 2016 செப்டம்பர் 22_ல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு தயாரிக்கப்பட்ட ‘பேஷண்ட் கேர் ரிப்போர்ட்’ டில் இருக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

அதிலுள்ள தகவல்களின் ஹைலைட்ஸ் பாயிண்ட்ஸ்...

* 10 மணிக்கு போயஸிலிருந்து அப்பல்லோவுக்கு போன்.

* 10.01 க்கு மூன்று மருத்துவர்கள் அடங்கிய ஆம்புலன்ஸ் அப்பல்லோவிலிருந்து போயஸ் நோக்கி கிளம்பியது. 

* 10.05 க்கு ஆம்புலன்ஸ் போயஸ் கார்டனை அடைகிறது. 

* போயஸ் கார்டன் இல்லத்தின் முதல்மாடியில் தனது அறையில் படுத்த நிலையில் இருந்திருக்கிறார். 

* செமி கான்ஸியஸ் நிலையில், மருத்துவர்களின் ‘மேடம்’ அழைப்புக்கு ‘ம் ...ஆங்’ என்றே பதிலளித்திருக்கிறார்.

* ஜெ., உடலில் எங்குமே காயமோ, புண்களோ இல்லை (சசி தப்பித்தார்)

* ஜெ.வுக்கு அதே இடத்தில் மருத்துவ சோதனை ஆரம்பமானது. 

* ஜெயலலிதாவின் பிபி அளவு 140/70 இருந்திருக்கிறது. சாச்சுரேஷன் (ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவு 100 இருக்க வேண்டும்) 48 என்றே இருந்திருக்கிறது. இது அவர் அபாயக் கட்டத்தில் இருக்கிறார் என்பதை காட்டியிருக்கிறது.

* டெம்ப்ரேச்சர் நார்மல். அதற்கு முந்தைய நாட்களில் ஃபீவர் வந்து சென்றது அருகிலிருந்தவர்களால் மருத்துவக்குழுவிடம் பகிரப்பட்டிருக்கிறது. 

* ஜெயலலிதாவுக்கு அப்போதிருந்த சர்க்கரையின் அளவு 508.

* அவரது அறையிலேயே ட்ரீட்மெண்ட் கொடுக்க ஆரம்பித்ததும் சாச்சுரேஷன் அளவு 98 ஐ தொட்டது. இதன் மூலம் வீட்டிலேயே மிக மிக அபாயகரமான நிலையை தொடுவதிலிருந்து ஜெயலலிதா காப்பாற்றப் பட்டிருக்கிறார்.

* 10: 25க்கு ஜெயலலிதாவுடன் ஆம்புலன்ஸ் அப்பல்லோ மருத்துவமனையை அடைந்தது. 

டாக்டர்கள் புடை சூழ அதி தீவிர ட்ரீட்மெண்ட் துவக்கம்... ஆனால் அவரது உடலில் காயங்களோ புண்களோ இல்லை என்கிற குறிப்பும் அதில் காணப்படுகிறது.

இதுவரை நடந்த சர்ச்சைகள் ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பில் எழுப்பட்டு வந்த சர்ச்சைகள் மருத்துவ சிகிச்சையில் ஜெயலலிதா இருந்த 72 நாட்கள் தொடர்பானது. சிகிச்சை பற்றி விசாரித்தால் சசியோடு மட்டும் நிறுத்துக் கொள்ள முடியாது. எய்ம்ஸ் மருத்துவர்கள் மத்திய அரசு தர்மயுத்த தலைவன், எடப்பாடியார் என பலரும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்னும் நிலையில் ஜெ., சிகிச்சையில் சேர்வதற்கு முந்தைய நிலை பற்றிய சந்தேகங்களை பொது வெளியில் எழுப்பும் நோக்கோடு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்தை எந்த இடத்தில் துவங்கி எந்த இடத்தில் முடிக்க வேண்டும் என்கிற வரையறையை இந்த அறிக்கை கொடுக்கிறது. இது பொது வெளியில் திகார் நாயகன் மற்றும் சசிகலாவை அசிங்கப்படுத்தி ஜெயலலிதாவை சசிகலாதான் கொன்றார் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்க தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பி.எஸுடன் கைகோர்த்த எடப்பாடியார் எக்ஸிகியூட் செய்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறிவருகின்றனர்.