நடிகர் கமல் ஹாசனுக்கு அரசியல் பற்றி தெரியாது. தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கமல் அரசியலுக்கு வந்தால் அதன்பின் கருத்து கூறுகிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஜூன் 14 ஆம் தேத துவங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது. சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். 

இதையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மலர் தூவி மரியாதை செய்தார். தமிழக அமைச்சர்களும், அதிமுக எம்.எல்.ஏ.க்களும், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், சட்டமன்ற கூட்டத்தொடர் சிறப்பாக நடைபெற்றதாக கூறினார். மக்களுக்குத் தேவையான திட்டங்களை சட்டப்பேரவையில் நிறைவேற்றி உள்ளோம். மறைந்த ஜெயலலிதாவின் லட்சியத்தை தொடர்வோம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நடிகர் கமல் ஹாசன் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்ச்ர, கமல் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்த பிறகு கருத்து தெரிவித்தால் நாங்கள் தெரிவிப்போம் என்றார்.

அதிமுக நாளிதழான நமது எம்.ஜி.ஆரில் தங்களின் செய்தி வரவில்லையே என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், எனது செய்தி தொடர்ந்து எம்.ஜி.ஆர். நாளிதழில் வந்து கொண்டிருக்கிறது. அதில் எந்த தடையும் இல்லை என்று கூறினார். 

இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம், சிறப்பான முறையில் எழுப்பப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.