அதிமுக அரசை கவிழ்க்க நினைக்கும் டிடிவி.தினகரன் மற்றும் மு.க.ஸ்டாலின் முயற்சி ஒருபோதும் பலிக்காது என முதல்வர் பழனிச்சாமி ஆவேசமாக கூறியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வது கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் சிலரது சூழ்ச்சியால் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறோம். உங்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தை கட்டிக்காத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் சிலர் அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று துடிக்கின்றனர். 

ஜெயலலிதாவால் 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர் டி.டி.வி. தினகரன். ஆனால் அவர் திமுகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டு அதிமுக அரசை கவிழ்க்க வேண்டும் என திட்டம் தீட்டி செயல்படுகிறார். தாங்கள் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ அதிமுக வெற்றி பெறக்கூடாது என செயல்படுகிறார். அவரது முயற்சி ஒருபோதும் பலிக்காது. உடலும், உயிரும் போல அதிமுகவையும், இரட்டை இலையையும் யாரும் பிரிக்க முடியாது என்றார்.

 

நான் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். நீங்கள் போடும் கட்டளையை நிறைவேற்றும் இடத்தில் நான் இருக்கிறேன். மு.க.ஸ்டாலின் தலைவர் என்ற கர்வம் பிடித்து பேசிக்கொண்டு இருக்கிறார். சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் மு.க.ஸ்டாலின். அவரால் 4 நாட்கள் வெயிலை தாங்க முடியாமல் கொடைக்கானல் சென்று உல்லாசமாக இருக்கிறார். இவரை 40 நாள் வெயிலில் போட்டால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிடுவார். மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாக அதிமுக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.