அணைகளில் இருந்து தூர் வாரப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக அள்ளி செல்லலாம் என முதலமைச்சர் எடப்பாடி அனுமதி வழங்கியுள்ளார்.

1934 ஆம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டது. கடந்த 83 ஆண்டுகளில் இது வரை மேட்டூர் அணை தூர் வாரப்படவில்லை. வெள்ளப்பெருக்கு மற்றும் மழை காரணமாக சுமார் 20 சதவீத அளவுக்கு சகதி படிந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 83 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக மேட்டூர் அணையில் தூர் வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தூர் வாரி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:

வறட்சியையொட்டி அணைகள், குளங்கள், ஏரிகள் தூர்வாரப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் விருப்பம்போல் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கபட்டுள்ளது.

விவசாயிகள் அல்லாதோர் மணல் அள்ளினால் தகுந்த நடவடிக்கை சட்ட ரீதியாக எடுக்கப்படும்.  மற்ற அணைகளையும் தூர் வார அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அணைகளை தூர் வாருதல் மூலம் கூடுதலாக 10 சதவீதம் நீர் சேமிக்க முடியும். 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கூடுதலாக தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது.

83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர் வாரப்படுகிறது. 1,519 ஏரிகள் 100 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்படுகிறது.

துணை வேந்தர் நியமனத்தில் சிறந்த துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் என ஆளுநர் எதிர்பார்க்கிறார்.