அம்மா ஆட்சியில் மாதம் மும்மாரி மழை பொழியுது!’ இதை ஜெயலலிதாவின் ஆளுகையின் கீழிருந்த ஏதோ ஒரு நிர்வாகி பேசியிருந்தால் அதில் ஆச்சரியமில்லை. சொன்னதோ சேலத்தின் ஆட்சியராய் இருந்தவர். இதுதான் ஜெயலலிதாவின் கெத்து. அவர் ஆண்டபோது தமிழகத்தில் நடக்கும் எந்த நன்மையுமே அவரால் நடந்ததாக மேற்கோளிடப்பட வேண்டுமென்பது அமைச்சர் பரிவாரங்களுக்கும், அதிகாரி கூட்டங்களுக்கும் வழங்கப்பட்ட வாய்மொழி உத்தரவு. 

இந்நிலையில் ஜெ., இறந்தபோது அவரோடு சேர்ந்து அ.தி.மு.க.வின் அதிகாரண தோரணைகளின் பல  வடிவங்கள் புதைக்கப்பட்டுவிட்டன. அவற்றில் ஒன்றுதான் ‘முதல்வர்’ பதவி மீதான பயம், ஆகப்பெரிய மரியாதை, நடுக்கம் எல்லாமே. ஜனநாயகம்! என்று சொல்லி இதை ஏற்பது ஒரு புறம் இருந்தாலும். ஆளும்  அணியில் உள்ள கோஷ்டி பூசலின் பட்டவர்த்தன வெளிப்பாடு இது என்றும் சொல்லலாம். சரி விஷயத்துக்குள் நுழைவோம் நேரடியாக... எம்.ஜி.ஆர். காலத்திலேயே அமைச்சராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன் ஜெயலலிதாவின் தளபதியாக இருந்து, இன்று இதோ எடப்பாடியின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருக்கிறார். 

என்னதான் எடப்பாடியார் கொங்கு மண்டல அமைச்சர்களை வைத்து தனக்கென தனி லாபி உருவாக்கி ஆட்சியை அசையாமல் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டாலும் கூட, செங்கோட்டையனிடமிருந்து சற்று தள்ளிதான் நிற்கிறார் அவர். செங்கோட்டையனின் சீனியாரிட்டியை பார்த்து ஒரு வித மரியாதையும், அவரது அரசியல் சாணக்கியத்தனத்தை பார்த்து ஒரு வித மிரட்சியும், சசி டீமுக்கு செங்ஸ் மீது பாசம் இருக்கிறதென்பதால் ஒரு வித வெறுப்பும் கூட இதற்கான காரணங்கள். 

இதனால் எந்த அமைச்சரின் அலுவல் விஷயத்திலும் தலையிட்டுவிடும் எடப்பாடியார், செங்ஸ் விஷயத்தில் மட்டும் மூக்கை நுழைப்பதில்லை. சொல்லப்போனால் எடப்பாடியார் அமைச்சரவையின் கீழ் தனக்கென தனி ராஜாங்கம்தான் நடத்திக் கொண்டிருக்கிறார் செங்கோட்டையன்! என்கிறார்கள். முதல்வர் பழனிசாமிக்கு எதிராக வெளிப்படையாக எந்த வம்பினையும் இழுக்காவிட்டாலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நறுக்கென தன் ஆதிக்கத்தை பதிவு செய்திட தவறுவதேயில்லை செங்ஸ். அந்த வகையில் இப்போது ஒரு வாக்கியத்தை உதிர்த்திருக்கிறார் , அதுதான் எடப்பாடியாரை சூடாக்கியுள்ளது.

 

அந்த வாக்கியம் இதுதான்...’தமிழகத்தில் நல்லவர்கள் ஆட்சி செய்வதால், தினமும் மழை பெய்கிறது. தமிழகம் செழிக்கிறது!’ என்று. நல்ல விஷயத்தைத்தானே சொல்லியிருக்கிறார், இதற்கு ஏன் எடப்பாடியார் டென்ஷனாக வேண்டும்? என்கிறீர்களா...’நல்லவர் ஆட்சி செய்வதால்’ என்று எடப்பாடியாரை மட்டும் குறிப்பிடாமல், “நல்லவர்கள் ஆட்சி செய்வதால்” என்று பன்மையில் சொல்லியுள்ளதே இந்த டென்ஷனின் பின்னணி. ‘நான் தான் அவரோட விஷயங்கள் எதுலேயும் மூக்கை நுழைக்காம, தனி ராஜ்ஜியம் நடத்திட விட்டுட்டேனே அப்புறம் என்ன? ஒரு முதல்வருக்கான கெளரவத்தை, அங்கீகாரத்தை தந்துட்டு போக வேண்டிதானே?’ என்று தன் நெருங்கிய சகாக்களிடம் கேட்டிருக்கிறார்.