விழுப்புரம் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் போராட்டம் நடத்தினார், அதற்காக அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் போராட்டம் நடத்தினார், அதற்காக அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானத்தின் தொடர்பாக உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசு ஏன் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ், பாமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதன்மீது இன்று சட்டமன்றத்தில் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதன்மீது உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக ஆட்சியில் அவசரமாக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டுவந்து முறையாக அவர்கள் நிறைவேற்றவில்லை என்று முதல் அமைச்சர் தனது உரையில் தவறான தகவலை சட்டமன்றத்தில் பதிவு செய்கிறார். ஆனால் அதிமுக பொருத்தவரையில் எல்லா வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். அதை கடைப்பிடித்து தான் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

ஆனால் இதை எதிர்த்து பல பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள், அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது, திமுக ஆட்சிக்கு வந்தது அப்போது வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே வழக்கறிஞர்கள் அதில் போதிய ஆதாரங்களை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. மூத்த வழக்கறிஞரை வைத்து திமுக ஏன் வாதாடவில்லை.? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர்,சாதிவாரி கணக்கெடுப்புக்கு என குணசேகரன் தலைமையில் ஒரு தனி குழுவை அமைத்து அக்குழு 6 மாத காலத்திற்குள் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என அதிமுக ஆட்சியில் குழு அமைக்கப்பட்டது, ஆனால் அந்த ஆணையம் நீட்டிக்கப்படவில்லை. அது நீட்டிக்கப்பட்டிருந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டில் இந்த நிலை வந்திருக்காது.

ஆனால் திமுக அரசு வேண்டும் என்றே திட்டமிட்டு அதிமுக அரசு மீது பழி சுமத்தி வருகிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றார், அதேபோல அதிமுக அரசு எங்கெல்லாம் வெற்றி பெற்றிருக்கிறதோ அந்த இடங்களெல்லாம் திமுக குறைகளை கூறி தேர்தலை தள்ளி வைத்தார்கள், தற்போது போராடி அந்த தேர்தல்கள் மீண்டும் நடத்தப்பட்டு முடிவுகள் வந்துள்ளது. அதிமுக அரசில் ஜனநாயக முறைப்படி அமைதியாக தேர்தல் நடைபெற்றது. தற்போது வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறது. 

காவல்துறை அரசின் ஏவல் துறையாக இருந்து பல்வேறு இடங்களில் அதிமுக வெற்றி பெற்ற இடங்களில் ஜனநாயக முறைப்படி இருக்கும் தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியாத ஒரு அவல நிலை ஏற்பட்டிருக்கிறது என்றார். அதேபோல் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் விழுப்புரம் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை குறித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினார், ஆனால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாகக் கூறினார்.