தேர்தல் மழைத்தூறல் விழுந்துவிட்டால் போதும் அரசியல் மைதானம் முழுக்க சின்னச் சின்ன அரசியல் தலை தும்பிகள் சிறகடிக்க துவங்கிவிடும். அவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இலக்கு இருக்கும். சிலரோ பெரிய கட்சிகளின் நண்பனாக தன்னை காட்டிக் கொள்வது, சிலருக்கோ ‘சீட்’  எதிர்பார்ப்பு, சிலருக்கோ பண ஆதாயம் மட்டுமே பிரதானம்! இப்படி ஏகப்பட்ட கலகலப்புகளும், லககலப்புகளும் நடக்கும். 

இவர்களின் இலக்கு வேறு வேறாக இருந்தாலும் கூட, ஏதோ ஒரு பெரிய கட்சியின் விரலை பாதுகாப்பாக பிடித்தபடி நின்று கொண்டு, அந்த பெரிய கட்சியின் எதிரியை நோக்கி இவர்கள் விடும் வார்த்தை அம்புகள் ஓவர் ஷார்ப்பாக இருப்பதுதான் கொடுமையே. பிரதான எதிரி கூட பேசாமல் இருப்பார், ஆனால் அவரது நிழல் ஒதுங்கிய பிஸ்கோத்து கட்சிகளோ அதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று போட்டுத் தாக்கும் விஷயங்கள் பெரும் பிரளயத்தையே கிளப்பிவிடும். 

ஆனால் சில சிறு கட்சி தலைவர்களோ, கிடைக்கும் இந்த தேர்தல் கால வாய்ப்பை டிப்ளோமேடிக்காக பயன்படுத்தி தங்களையும், தங்கள் அமைப்புகளின் நிலையையும் மேம்படுத்திக் கொள்வது உண்டு.தேர்தல் சீசனான இப்போது, அப்படிப்பட்ட சிறு தலைவர்களின் தடாலடி பேட்டிகளை நாமும் தவிர்க்காமல் அவ்வப்போது காண்போம். அந்தவகையில், தி.மு.க.வின் நிழலில் நெடுங்காலமாக நிற்கும் ‘பெருந்தலைவர் மக்கள் கட்சியின்’ தலைவர் தனபாலனின் கிச்சுகிச்சு மற்றும் கிறுகிறு. 

பேட்டியின் ஹைலைட்ஸ் இதோ...

* பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாக எதையும் செய்யாத எடப்பாடியார்...இப்போது சி.பா.ஆதித்தனார் மற்றும் ம.பொ.சி. ஆகியோரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிப்பதெல்லாம் தேர்தல் ஸ்டண்டுகளே அன்றி வேறேதுமில்லை. 

* தி.மு.க.வுடன் நெடுநாள் உறவில் இருப்பதால், அவர்களிடம் உரிமையாக சீட் கேட்கும் சுதந்திரம், தைரியம் எனக்கு உண்டு. தி.மு.க. கூட்டணியில் சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயங்குகின்றன. ஆனால் நானோ கடந்த சட்ட மன்ற தேர்தலிலேயே அதில் போட்டியிட்டவன். அவர்களின் சின்னத்தை மதித்தவன், மதிப்பவன் நான். இப்போதும் அதற்கு தயார். எங்களுக்கு சீட் கொடுக்க அவர்கள் தயாரா? 

* அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் அதை தாயுடன் உறவு கொள்வதற்கு சமம் என்று அசிங்கமாக பேசிவிட்டு, இப்போது கூட்டணி வைத்துள்ளார் ராமதாஸ். அப்படியென்றால் இதனை எந்த உறவாக எடுத்துக் கொள்வது டாக்டர்? தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியிடம் அ.தி.மு.க - பா.ம.க. தோற்பதற்கு ராமதாஸ், அன்புமணியின் முந்தைய பேச்சுக்களே போதும். அவர்களின் பழைய வாயே இந்த புதிய கூட்டணியை தோற்கடித்துவிடும். 

* சினிமாக்காரரான கமலை பார்க்க கூட்டம் கூடும். ஆனால் அது ஓட்டுக்களாக மாறாது. அம்மாம் பெரிய சிவாஜி கணேசனை இப்படி கூட்டத்தை நம்பி ஏமாந்தார்ன்னா கமலெல்லாம் என்ன ஆவார்? சிவாஜிக்கு ஏற்பட்ட கதிதான் கமலுக்கும்! ...என்று போட்டுப் பொரிந்திருக்கிறார். நீங்க சொன்னா சரிதாம் அண்ணாச்சி!