தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள வேலூர் மக்களவை தொகுதி தவிர மற்ற 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான ஆண்களும், பெண்கள் முதல் முறையாக ஓட்டுப் போடும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு அளித்தனர். தமிழகம் முழுவதும் 70.90 சதவீதம் வாக்குகள் பதிவானதாக ததேர்தல் அதிகாரி ஆணையம் தகவல் தெரிவித்தது. 

இந்நிலையில் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 'தேர்தலில், கூடுதலான வாக்கு சதவீதம், அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகவே மக்கள் வாக்களித்துள்ளதை காட்டுகிறது. தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகத் தெரிவித்தார். நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றார். இனி வரும் தேர்தல்களிலும் இதே கூட்டணி தொடர அதிக வாய்ப்புள்ளது.

மேலும் பேசிய அவர் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் அதிக பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று பல இடங்களில் சூறை காற்று வீசியதால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள். தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் அதிகாரிகளுடன் நாங்கள் தற்போது ஆலோசனை நடத்த முடியாது என விளக்கமளித்துள்ளார்.