தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. ஆனாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 8 தொகுதிகளை வெல்லாவிட்டால் எடப்பாடி அரசு கவிழும் அபாயம் உள்ளது. 

மக்களவை தேர்தலுக்காக அதிமுக தலைமையில் உருவாகியுள்ள கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிக- 4, ஏ.சி.சண்முகம், என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ள அதிமுக மீதமுள்ள 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

அதேபோல திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு-2 விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு சீட்டும் ஒதுக்கியது. திமுக கூட்டணியில் 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஆக திமுக- அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணிகட்சிகளுக்கு தலா 20 தொகுதிகளை ஒதுக்கி விட்டு 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. மக்களவை தேர்தலை விட 18 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் அதிமுக ஆட்சிக்கு வாழ்வா சாவா? போராட்டமாக உள்ளது. 

தமிழக சட்டப்பேரவையில் தற்போதைய நிலைப்படி பெரும்பான்மையை நிரூபிக்க 109 உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி அரசுக்கு தேவை. ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக, சபாநாயகர் நீங்கலாக, 109 எம்எல்ஏக்கள் உள்ளனர். அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆதரவாளர்களாக இருப்பதால், அவர்களையும் டிடிவி தினகரனையும் சேர்த்தால், அந்த அணியில் 4 பேர் மட்டுமே உள்ளனர்.

திமுகவில் 88 உறுப்பினர்களும், காங்கிரஸ் 8 எம்எல்ஏக்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் ஒரு உறுப்பினர் என திமுக கூட்டணியில் மொத்தம் 97 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே, பெரும்பான்மைக்குத் தேவையான 108 எம்.எல்.ஏக்கள் மற்றும் சபாநாயகரின் ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இருக்கிறது. தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் தங்கள் நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவிக்கவில்லை. 

ஆகையால் இதுவரை ஆபத்து இல்லாமல் தப்பி வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆளும் அதிமுக அரசுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு ஆபத்தாக வந்துள்ளது. 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இப்போது இல்லை என்பதால் மீதமுள்ள 18 தொகுதிகளுக்கும் ரிசல்ட் வந்தால் உறுப்பினர்களின் எண்ணிக்கை 231 ஆக இருக்கும். ஆக ஆட்சியமைக்க எடப்பாடி அரசுக்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இப்போது உள்ள 108 உறுப்பினர்களைத் தவிர தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரை விடுத்து  8 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும்.

ஆகையால் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இடைத்தேர்தலை சமாளித்து ஆட்சியை தக்கவைப்பாரா என பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். மக்களவை தேர்தலில் வாஷ் அவுட் ஆனாலும் இடைத்தேர்தலில் 8 தொகுதிகளை வென்றால் மேன் ஆப் தி மேட்ச் எடப்பாடி தான்..!