ஏதோ திடீரென அரசியலில் பிரவேசித்து பதவிக்கெல்லாம் வந்துவிட முடியாது. அப்படி வருபவர்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுக்கிற மக்களும் அல்ல தமிழ்நாட்டு மக்கள். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் ஆட்சி அமைப்பது அதிமுகதான்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரடியாகவும் நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாகவும் விக்கிரவாண்டியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் தமிழக முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோற்கடித்தது. அதிமுகவுக்கு வெற்றி தேடி தந்த அதிமுகவுக்கு வாக்களார்கள் சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் விக்கிரவாண்டியில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசினார். “ நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி கூறி வெற்றி பெற்றார். அதை மக்கள் இப்போது உணர்ந்துவிட்டார்கள். அதனால்தான், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வாவை கொடுத்துவிட்டார்கள். பலரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரப் போவதாகப் பேசிவருகிறார்கள்.

