edappadi is trying to get more salaries to retain the MLAs

துணை முதலமைச்சர் பதவியை பிடிக்கவே பன்னீர்செல்வம் தியானம் செய்ய போனார் எனவும் எம்.எல்.ஏக்களை தக்கவைத்து கொள்ளவே அவர்களுக்கு அதிக சம்பளம் வழங்க எடப்பாடி முனைப்பு காட்டுகிறார் எனவும் சுயேட்சை எம்.எல்.ஏ டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவை நேற்று முன் தினம் தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி இன்று காலை சட்டப்பேரவை தொடங்கியது. 

இதில் கேள்விபதில் நேரங்களில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. அதற்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். 

ஆர்.கே.நகரில் சுயேட்சையாக தேர்தலில் நின்று வெற்றி பெற்ற டிடிவி தினகரனும் இந்த பேரவையில் கலந்து கொண்டு கேள்வி எழுப்பி வருகிறார். 

இந்நிலையில் இன்று மீண்டும் அவையில் சசிகலா குடும்பம் குறித்தும் பெரும்பான்மை குறித்தும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்ததாக தெரிகிறது. 

இதையடுத்து பதிலடி கொடுக்கும் வகையில் டிடிவி தினகரன் பேச முற்பட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் ஒபிஎஸ்க்கும் தங்கமணிக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 

சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற விவாதத்தை அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், துணை முதலமைச்சர் பதவியை பிடிக்கவே பன்னீர்செல்வம் தியானம் செய்ய போனார் எனவும் எம்.எல்.ஏக்களை தக்கவைத்து கொள்ளவே அவர்களுக்கு அதிக சம்பளம் வழங்க எடப்பாடி முனைப்பு காட்டுகிறார் எனவும் குற்றம் சாட்டினார். 

சார் சார்ன்னு கூப்பிட்டு பேசுனவர் தான் பன்னீர் எனவும் எங்கள் குடும்பத்தால் தான் அவர் முதலமைச்சர் சீட்டில் உட்காந்தார் எனவும் தெரிவித்தார். 

இதனிடையே சட்ட்ப்பேரவையில் எம்.எல்.ஏக்களுக்கு அதிக சம்பளம் வழங்குவது குறித்த மசோதாவை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.