நாளை நடைபெற உள்ள வாக்கெடுப்பில் எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க திமுகவும் காங்கிரசும் தனித்தனியே முடிவு செய்துள்ளன.
தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் 2016 ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. அதிமுக 134 இடங்களிலும் திமுக 89 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், முஸ்லீம் லீக் ஒரு இடத்திலும், மொத்தமாக திமுக கூட்டணி 98 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதில் அரவக்குறிச்சி தஞ்சாவூர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
பதவியேற்பு தினத்தன்று திருப்பரம்குன்றம் எம்.எல்.ஏ மரணமடைந்தார். இதையடுத்து அதிமுகவின் பலம் 133 ஆக குறைந்தது. சபாநாயகராக தனபால் தேர்வு செய்யப்பட்ட நிலையில் 132 எம்.எல்.ஏக்கலுடன் ஜெயலலிதா பதவியேற்றார்.
அதன்பிறகு நடந்த இடைதேர்தலில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து 135 ஆக உயர்ந்தது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு யார் முதல்வர் எனும் போட்டியில் அதிமுக இரண்டு பட்டு நின்றது. ஒருபக்கம் சசிகலா தரப்பும் மறுபுறம் ஓ.பி.எஸ் தரப்பும் நின்றனர். சசிகலா சிறைக்கு செல்ல எடப்பாடி பழனிச்சாமி சசிகலா தரப்பில் தேர்வு செய்யப்பட்டார்.
135 எம்.எல்.ஏக்கள் இருந்த நிலையில் ஜெயலலிதா மரணமடைந்ததால் 134 ஆக குறைந்தது. இதில் 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
நேற்று அவருக்கு பதவி ஏற்க அனுமதி அளித்த ஆளுநர் 15 நாளுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார்.

ஓ.பி.எஸ்சுடன் ஏற்கனவே 10 எம்.எல்.ஏக்கள் இருக்க நடராஜனும் எடப்பாடியை எதிர்த்து வாக்களிப்பேன் என பேட்டியளித்த நிலையில் மீதமுள்ள 124 அதிமுக எம்.எல்.ஏக்களின் முடிவை பொறுத்தே எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி தொடருமா முடியுமா என்பது தெரியவரும்.
இதில் பிரதான எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் தனித்தனியாக தங்கள் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டினர். கூட்டத்தின் முடிவில், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க போவதாக திமுகவும் காங்கிரசும் தெரிவித்துள்ளது.
மொத்தம் 233 உறுப்பினர்கள் தற்போது சட்டசபையில் உள்ளநிலையில் 117 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தால் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி பிழைக்கும்.
இந்நிலையில் திமுகவும் காங்கிரசும் எதிர்த்து வாக்களிப்பேன் என அறிவித்துள்ளதால் மீதமுள்ள 124 அதிமுக எம்.எல்.ஏக்களை நம்பி மட்டுமே எடப்பாடி நாளை களமிறங்க வேண்டும்.
