நடிகர் விஜய் நடிப்பில் புதியதாக உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த ஆடியோ நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என சன் டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னதாக  சில ஆடியோ ரிலீஸ் விழாவில் தமிழக அரசை விமர்சித்து பேசி சிக்கலில் மாட்டினார் விஜய். மெர்சல் பட இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியதால் அந்தப் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து தயாரிப்பாளர் தரப்பிலிருந்து மன்னிப்பு கோரச்சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டதால், வேறு வழியின்றி விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று மரியாதை நிமித்த சந்திப்பை நிகழ்த்தினார். அதற்குப் பின் இந்த சிக்கலிலிருந்து படம் வெளியானது. இதனை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்த சர்க்கார் படம் அதிமுக அரசை விமர்சித்தது. திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழித்தெறியப்பட்டன. இதுகுறித்து பதிலடி கொடுக்க நடிகர் விஜய் அடுத்தபட ஆடியோ வெளியீட்டு விழா வரை காத்திருந்தார்.

பிகில் பட ஆடியோ விழாவில் வழக்கம்போல் தனது அதிரடி பேச்சால் விமர்சித்தார் விஜய். அதிமுக அரசை ஊழல் கட்சி என விமர்சித்து இருந்தார். யார் யாரை எங்கே வைக்க வேணுமோ அவரவர்களை அங்கே வைக்க வேண்டும் என அரசியல் பேசியது பிகில் படம் வெளியாவதில் சிக்கலை ஏற்படுத்தியது.  இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தந்தையைப் போன்றவர் என விஜய் புகழாரம் சூட்ட, படத்தை சிக்கலிலிருந்து திரைக்கு  கொண்டு வந்தனர். 

இப்படி ஒவ்வொரு முறையும் ஆளும் கட்சியை சீண்டி சிக்கலில் மாட்டுவது, பின் அந்த சிக்கலில் இருந்து விடுபட ஆளும் அரசை புகழ்வது என தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் விஜய் தனது புதிய படமான மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கவனமாக பேச வேண்டும் என அவருக்கு நெருக்கமானவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் அதிமுகவை விமர்சித்து விட்டு பின் அவர்களிடம் சமாதானம் செய்து கொள்வதும் உங்கள் இமேஜை சரிக்கும். ஒவ்வொரு முறையும் முதல்வர் தரப்பில் சமாதானம் ஆவார்கள் என நினைக்க வேண்டாம்.

 சந்தர்ப்ப சூழல் மாறினால் நீங்கள் நடித்த படம்தான் சிக்கலில் மாட்டித் தவிக்கும் என விஜயிடம் அறிவுறுத்தி உள்ள அவர்கள், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பார்த்து கவனமாக பேச வேண்டும் என கூறி இருக்கிறார்களாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது இதேபோல் தலைவா படம் சிக்கலில் மாட்ட, நடிகர் விஜய் கைகளை கட்டி உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட பின்பு தலைவா படம் ரிலீஸ் ஆனது.