சேலத்தில் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். இந்தப் பிரசாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்து பேசியதாவது:
மு.க. ஸ்டாலின் செல்லும் இடங்களிலெல்லாம், அதிமுக ஆட்சியிலே என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்கிறார். ஸ்டாலின் அவர்களே.. சேலத்துக்கு வந்துவிட்டுதானே போனீர்கள்? நீங்கள் வருகிறபோது சேலத்தில் இருக்கிற பாலங்கள் அதற்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கின்றன. சேலத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாத வகையில் அதிமுக ஆட்சியில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பல பாலங்கள் விரைவில்  திறக்கப்பட உள்ளன.

 
மக்களுக்காக சேவை செய்கிற அதிமுக அரசை கொச்சைப்படுத்தி ஸ்டாலின் பேசுகிறார். என்னுடைய அரசியல் வாழ்க்கை கிழியப்போகிறது எனச் சொல்லியிருக்கிறார். இந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் இந்த எடப்பாடி பழனிச்சாமியினுடைய அரசியல் வாழ்க்கை தொடங்கப்போகிறது. உங்களுடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஏற்கனவே கண்ட கனவெல்லாம் கானல் நீராகி விட்டது. அந்த விரக்தியில் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கிறார். எந்தக் காலத்திலும் அந்தக் கனவு நிறைவேறாது.


ஸ்டாலின் போட்ட திட்டம் அனைத்தும் தவிடு பொடியாகி விட்டது. அதிமுகவை உடைக்க நினைத்தார். அது முடியவில்லை. ஆட்சியை கவிழ்க்க நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. இப்போது தேர்தல் வந்திருக்கிறது. சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நூற்றுக்கு நூறு சதவீதம் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.