Edapadi K Palanisamy Master Plan Against OPanneerselvam

பன்னீர்செல்வத்திற்கு நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் ஆதரவு எடப்பாடி தரப்பை அதிக அளவில் கவலை அடைய செய்துள்ளது.

இந்நிலையில், அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மக்களை சந்தித்தால், ஆதரவு இன்னும் அதிக அளவில் பெருக தொடங்கி விடும்.

அத்துடன், தமது அரசு மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பும் அதிகமாகிவிடும் என்பதால், அதை எப்படி சரி செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார் எடப்பாடி. 

இந்நிலையில், அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்தால்தான், எந்த சிக்கலும் இன்றி இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற முடியும், தொடர்ந்து அரசியல் செய்ய முடியும் என்று இரு அணிகளுமே விரும்பின.

ஆனால், சசிகலா குடும்பம் இருக்கும் வரை அது சாத்தியம் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து கொண்ட பன்னீர், நாளை மறுதினத்தில் இருந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க இருக்கிறார்.

அப்போது, ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்துள்ள மர்மம் பற்றி மக்களிடம் விளக்கி, அதற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும், அதற்கு, எடப்பாடி தலையிலான அரசு தடையாக இருப்பதாகவும் பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

பன்னீரின் இந்த பிரச்சாரம், ஆளும் தமது தரப்புக்கு, மக்கள் மத்தியில் தேவை இல்லாத அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால், அதை தடுக்க என்ன செய்வது? என்று யோசித்து வந்தார் எடப்பாடி.

பன்னீருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை சிதைக்கும் வரையில், அவரை எதிர்கொள்ள முடியாது என்றும் எடப்பாடி உணர்ந்தார். 

இந்நிலையில், பன்னீர்செல்வம் அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்த காலத்தில் நடந்த விதி மீறல்கள், அதனால் அவரது குடும்பமும், ஆதரவாளர்களும் அடைந்த ஆதாயம் ஆகிய கருப்பு வரலாற்றை திரட்டி, மக்கள் மன்றத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை சிதைப்பதே, சரியான வழி என்று அவருக்கு தோன்றியது.

பன்னீர்செல்வம் விசுவாசமானவர் அல்ல. ஊழல் வாதி. எல்லாமே நடிப்பு. அவருக்கு எங்கெல்லாம் சொத்துக்களும், முதலீடுகளும் உள்ளன. எப்படி எல்லாம் சட்டத்தை வளைத்து, அவரும் அவரது குடும்பத்தினரும் ஆதாயம் அடைந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் தற்போது எடப்பாடியால் திரட்டப்பட்டு வருகிறது.

அதற்காக, பன்னீர்செல்வத்தின் கோப்புகளை இதுவரை கவனித்து வந்த ராமச்சந்திரன் என்பவர் கொடுத்த முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் எடப்பாடி தரப்பினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

குறிப்பாக, பன்னீர் முதல்வராக இருந்தபோது, வணிக வரித்துறையின் மூலம், செல்போன் இறக்குமதி வரியை குறைத்து, அதன் மூலம் பெறப்பட்ட பலநூறு கோடி ரூபாய்க்கான ஆதாரங்களை எடப்பாடி தரப்பு திரட்டி உள்ளது. 

அதேபோல்,ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்த போது, ஏலக்காய் வரியை 5 சதவிகிதத்தில் இருந்து 2 சதவிகிதமாக குறைத்து தன்னிச்சையாக அறிவித்தார் பன்னீர்செல்வம்.

அதன் பின்னணியில் நடந்தது என்ன? யாருக்காக இந்த கோப்பில் தன்னிசையாக பன்னீர்செல்வம் கையெழுத்திட்டார்? அதன் மூலம் எத்தனை கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது? என்பதற்கான தகவலையும் எடப்பாடி தரப்பு திரட்டி உள்ளது.

மேலும், பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, வெளிநாட்டு பட விநியோக உரிமை சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு, அவர் மகன் ரவீந்திரநாத் குமார் அந்த உரிமையை பெற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த ஆதாரங்களையும் எடப்பாடி தரப்பு தோண்டி எடுத்துள்ளது.

வெளியில் தெரிந்த இது போன்ற விஷயங்களை விட, வெளியில் தெரியாத பல விஷயங்களிலும் பன்னீர்செல்வம் வசமாக சிக்கி உள்ளார் என்று எடப்பாடி தரப்பினர் கூறி வருகின்றனர்.

அதனால், ஜெயலலிதா மர்ம மரணம், எடப்பாடி அரசு மீதான விமர்சனம் என்று, பன்னீர்செல்வம் எந்த பிரச்சினையை கையில் எடுத்தாலும், பன்னீர்செல்வத்தின், கருப்பு வரலாற்று பக்கங்களை, மாக்கள் மன்றத்தில் ஆதாரத்துடன் வெளியிட்டு, அவரது செல்வாக்கை சிதைக்க வலுவான ஆதாரங்களுடன் காத்திருக்கிறது எடப்பாடி தரப்பு.