ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக் காத்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை  தெரிவித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை என இரு அமைப்புகளும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தன. சிபிஐ கைது செய்த வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால், அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் அவர் இன்னும் ஜாமீன் பெறவில்லை. ஜாமீன் பெற முயற்சி செய்துகொண்டிருக்கிறார். ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். 
இந்த வழக்கு நீதிபதிகள் பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களை கலைத்துவிடுவார். எனவே ஜாமீன் வழங்கக் கூடாது” என வலியுறுத்தினார். இந்த வாதத்துக்கு ப. சிதம்பரம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த வழக்கில் முக்கியமாகக் குற்றம்சாட்டப்பட்டவர் கார்த்தி சிதம்பரம். அவருடைய தந்தை என்பதாலேயே 100 நாட்களுக்கும் மேலாக சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்” என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட துஷார் மேத்தா, “அமலாக்கத் துறை இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை இன்னும் கைது செய்யவில்லை. அவர் இதுவரை ஜாமீன் கோரியும் விண்ணப்பிக்கவில்லை. பண மோசடி தடுப்புச் சட்டத்தில் உள்ள சில விதிமுறைகளை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் கார்த்தி கைது செய்யப்படுவதில் ஒரு தடை இருந்துவருகிறது. அந்தத் தடை நீக்கப்பட்டவுடன் கார்த்தி சிதம்பரமும் கைது செய்யப்படுவார்” எனத் தெரிவித்தார்.


இந்த வாதங்களின்போது கார்த்தி சிதம்பரமும் நீதிமன்றத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். ஏற்கனவே ப.சிதம்பரம் 100 நாட்களைக் கடந்து சிறையில் இருந்துவரும் நிலையில், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்தையும் கைது செய்ய அமலாக்கத்துறை காத்திருப்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.