டெல்லி தப்லீக் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சாத் கந்தால்வி மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்குப்பதிவை அமலாக்கத்துறையினர் பதிந்துள்ளனர்.
தப்லீக் ஜமாஅத் அமைப்பின் சார்பில் டெல்லியில் மார்ச் மாதத்தில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேசியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டைச் சேர்ந்த 960 பேர் பங்கேற்றார்கள். இந்த மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்றுநோய் பரவியது. இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டெல்லியில் 200-க்கும் மேற்பட்டோர் கூட தடைவிதிக்கப்பட்ட நிலையில், மா நாடு நடத்தப்பட்டது கேள்விக்குள்ளானது. ஆனால், அரசின் அனுமதியைப் பெற்றுதான் மாநாடு நடத்தப்பட்டது என்று தப்லீக் ஜமாஅத் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், இஸ்லாமிய தலைவர்கள் பலர் மாநாட்டை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தும் அதை அந்த அமைப்பின் தலைவர் சாத் காந்தல்வி ஏற்கவில்லை என்ற  தகவல் பின்னர் தெரியவந்தது. இதனையடுத்து கடந்த மார்ச் 31 அன்று தப்லீக் ஜமாத் தலைவர் சாத் கந்தால்வி மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் சாத் கந்தால்வி உள்ளிட்ட தப்லீக் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர்கள் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை என்று வழக்கை அமலாக்கத்துறையினர் தற்போது பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே வருமான வரித்துறை தப்லீக் ஜமாஅத் அமைப்பு மற்றும் தலைவர், உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.