’தலித்துகளுக்கான வெற்றி கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை’ என சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெற்றது குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். கடந்த 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்ட திருமாவளவன் இதே சிதம்பரம் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2014-ம் ஆண்டு தோல்வியைத் தழுவினார். மீண்டும், இம்முறை சிதம்பரம் தொகுதியிலேயே போட்டியிட்டார்.

திமுக கூட்டணி வேட்பாளராகக் களம் இறங்கினாலும் சுயேட்சை சின்னத்திலேயே திருமாவளவன் தேர்தலைச் சந்தித்தார். இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் திருமாவளவன் முன்னிலை பெறுவதும், பின்னடைவை சந்திப்பதும் என இழுபறி நள்ளிரவு வரை நீண்டது.

19-வது சுற்றில் திருமாவளவன் முன்னிலையில் இருந்தார். அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் திடீரென வெளியிடப்படவில்லை. இதனால், முடிவுகளை அறிவிப்பதில் மிக தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக நள்ளிரவுக்கு மேல் அவர் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

 

இந்நிலையில், திருமாவளவன் வெற்றி குறித்து இயக்குனர் ப.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகிழ்ச்சி !! இந்த வார்த்தையில் அண்ணன் திருமா வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேரெவர் வெற்றியுடனும் ஒப்பிடமுடியாது! மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருக்க முடியும்! ஆனால், எப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது! ஜெய் பீம்!!” எனக் கூறியுள்ளார். அடுத்த பதிவில் ’ஆம் எல்லோரையும் போல் வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது தனித் தொகுதியாக இருந்தாலும்! #சிதம்பரம் ‘ எனப்பதிவிட்டுள்ளார்.