கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்ட மக்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிட்டது. இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கஜா புயல் நிவாரண பணிகளுக்காக  1000 கோடி உடனடியாக விடுவிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதலாக ஒரு வேட்டி, சேலை வழங்கப்படும்.  முகாம்களில் தங்கியுள்ள பெரியோர், பெண்கள், குழந்தைகளுக்கு ஆவின் நிறுவனம் வழியே பால் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

கஜா புயலால் இறந்தோரூக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் முன்பே அறிவிக்கப்பட்டு உள்ளது.  காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம், சாதாரண காயத்துக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். புயலால் உயிரிழந்த 1,181 ஆடுகளுக்கு தலா ரூ.3 ஆயிரம், 14,986 கோழி, பறவைகளுக்கு தலா ரூ.100 வழங்கப்படும்.

உயிரிழந்த 231 பசு, எருமை மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரம், 20 காளை மாடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், 19 கன்றுகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கஜா புயலுக்கு முன்பு எடுக்கப்பட்ட நடவடிக்கை அதன் பின்னர் சிறப்பாக இல்லை என பொது மக்கள் நினைத்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற அமைச்சர்களை பொது மக்கள் திருப்பி அனுப்பினர். அவர்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இதனைல் அடுத்து வரவுள்ள இடைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்லில் பெரும் பாதிப்பு உண்டாகும் என அவர் எண்ணுகிறார்.

இந்நிலையில் இதனை சரிகட்ட புதுப் பிளான் ஒன்றை எடப்பாடி வகுத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது பொது மக்களின் அதிருப்தியை சமாளிக்க வீட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

அதைப்போல் தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கவும், மின் கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்யவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.