பள்ளிப் பருவத்தில் உதயநிதி சரியாக சாப்பிடவில்லை என்றாலும், படிக்கவில்லை என்றாலும் கடுமையாக கண்டித்துள்ளேன் என துர்கா ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 44-ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, துர்கா ஸ்டாலின் அளித்துள்ள ஒரு சிறப்பு பேட்டியில் பல சுவாரசிய தகவலைகளை பகிர்ந்து உள்ளார். அதில், ’’ஒரு பெண்ணாக இருந்து ஜெயலலிதா எந்த முடிவுவையும் தனி நபராக இருந்து முடிவெடுப்பார். ஆனால், அவரை நான் நேரில் பார்த்ததில்லை. கட்சியை கட்டுகொப்பாக வைத்துக்கொண்டு சிறப்பாக வழிநடத்தியவர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக கேட்டபோது 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் வைத்திருந்த ஜெயலலிதா யாரும் சந்திக்காமல் மர்மமாகவே வைத்திருந்தனர். 

ஜெயலலிதா அம்மையாருடன் உறவினர்கள் உடனிருந்திருந்தால் இப்படி நடந்து இருக்காது. நல்லது, கேட்டது எதுவாக இருந்தாலும் உடனே ஓடி வருவது நமது சொந்த பந்தம்தான். ஆனால் எங்களது குடும்பத்தில் உடல்நிலை யாருக்காவது சரியில்லை என்றால் கூடவே இருந்து கவனித்துக்கொள்வோம்.  

 என் கணவர் ஒரு அப்பாவாக அனைத்தையும் பிள்ளைகளுக்கு சிறப்பாக செய்தார். பிள்ளைகளுக்காக நிறைய நேரம் செலவழிப்பார். ஹோம் ஒர்க் செய்ய உதவி செய்வது முதல் தேர்வு என்றால் அவர்களுடன் அமர்ந்து சொல்லிக்கொடுப்பது வரை மட்டுமின்றி காலை நேரத்தில் எழுந்து ஒரு முறை சொல்லிக் கொடுத்து, தேர்வுக்கு அனுப்பி விடுவது, பள்ளிக்கு அழைத்து சென்று இருவரையும் இறக்கி விடுவது என சொல்லிக் கொண்டே போகலாம்.

 

என்னுடைய மகன் மற்றும் மகள் காதலித்ததை முதல்முறை அவரது தந்தையிடம்தான் கூறினர். நான் அரசியல் குடும்பத்தில் ஏன் திருமணம் செய்து கொண்டேன் என ஒருபோதும் நினைத்தது கிடையாது. ஆனால், இரவு நேரத்தில் வந்து தலைவர் கருணாநிதி மற்றும் கணவர் மு.க.ஸ்டாலினை கைது செய்த போது மனஉளைச்சல் இருந்தது’’ என அவர் கூறினார். 

உங்கள் மகன் உதயிநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டு தற்போது திமுக இளைஞரணி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளாரே என்கிற கேள்விக்கு துர்கா ஸ்டாலின் கூறுகையில், ’’ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபாடு ஏற்படுவது வழக்கம். தேர்தல் பிரச்சாரத்தின் போது தொண்டர்களின் உற்சாகத்தை பார்க்கும் போது அரசியலுக்கு வருகிற எண்ணம்  உதயநிதிக்கு தோன்றி இருக்கலாம்’’ என  அவர் கூறியுள்ளார்.