தர்பார் திரைப்பட நஷ்ட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி தீர்வு காண அரசு உதவும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான படம் தர்பார். இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் வில்லனாக நடிகர் சுனில் ஷெட்டியும் நடித்திருந்தனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி தமிழில் வெளியான இத்திரைப்படம் அதே நாளில் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ஏராளமான திரையரங்குகளில் வெளியானது. படத்தைப் பார்த்து ரசித்த ரசிகர்கள் ரஜினிகாந்தின் ஸ்டைலைக் கொண்டாடினாலும் கலவையான விமர்சனங்களும் இப்படத்துக்கு கிடைத்தன.

படம் வெளியான 4 நாட்களில் ரூ.150 கோடி வசூலித்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இந்தப் படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்று கூறி சமீபத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட சில ஏரியாக்களின் விநியோகஸ்தர்கள் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை சந்திக்க முடிவெடுத்தனர். அதன் பின்னர் இந்தவிவகாரம் குறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் எந்த ஒரு பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர்ராஜூ, “தர்பார் திரைப்பட நஷ்ட விவகாரம் தொடர்பாக விநியோகஸ்தர்கள் அரசை அணுகவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தை அணுகுவது தீர்வு காண அரசு உதவும். தர்பார் திரைப்படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு அரசு உதவும்” என்று கூறியுள்ளார்.