திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் நேற்று இரவு காலமானார். அவரது உடலுக்கு கீழ்பாக்கம் வேலங்காடு மயானத்தில் இறுதி அஞ்சலி நடத்தப்பட்டது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதிச் சடங்கில் திமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர். 

அப்போது, இறுதி அஞ்சலி செலுத்தும்போது மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுதார். அருகில் இருந்த துரைமுருகனோ மார்பில் அடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு கதறி கதறி அழுதார். கடந்த சில நாட்களுக்கு முன் குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ, காத்தவராயன் மரணமடைந்த போது துரைமுருகனும், மு.க.ஸ்டாலினும் அங்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்போது மு.க.ஸ்டாலின் கண்ணை மூடிக்கொண்டு கதறி அழுதார். ஆனால் அருகில் இருந்த துரைமுருகன் எந்தச் சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தார். 

ஆதாயம் இல்லாமல் ஆண்டி ஆற்றில் இறங்க மாட்டான் என்பதுபோல மவுனமாக அழுதாலும், மண்டி போட்டு அழுதாலும் அதில் துரைமுருகனின் சுயநலம் கட்டாயம் இருக்கும். அதே பாணியை தனது மகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கையிலெடுத்தார் துரைமுருகன். கடந்த முறை மக்களவை தேர்தல் நிறுத்தப்பட்ட போதே கண்ணீர் விட்டு கதறி அழுது தொண்டர்களின் இரக்கத்தை சம்பாதித்துக் கொண்டார். அடுத்து ‘’எங்கள் வீட்டில் யாரோ பணத்தைக் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போய் விட்டனர். அவர்களே வருமான வரித்துறையினரை அனுப்பி இருக்கின்றனர்.

 

எங்கள் விட்டு வேலைக்காரருக்கு யாரோ செல்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். என்னுடைய மகனை லாரி ஏற்றி கொல்ல சதித் திட்டம் தீட்டுகிறார்கள். அந்த துரோகி யார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவரது பெயரை நான் சொல்ல மாட்டேன்’’எனக் கூறி கண்ணீர்விட்டு கதறினார். இப்போது திமுகவினர் அனைவரும் லேசாக அழ, துரைமுருகனோ மார்பில் அடித்துக் கொண்டு கதறி கதறி அழுதது செயற்கையாக தெரிவதாக திமுக உடன்பிறப்புகளே பேசிக்கொள்கின்றனர்.  பொதுசெயலாளர் பதவியை பெறுவதற்காகவே அவர் அழுது நடிப்பதாக கூறுகிறார்கள்.