அதிமுக ஆட்சி கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரம், உயிரிழப்புக்கு அதிமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என திமுக மூத்த தலைவர் துரைமுருகன்  தெரிவித்துள்ளார். 
கொரோனா பாதிப்பையடுத்து தமிழக அரசு மீண்டும் புதிய வரவு செலவு திட்ட அறிக்கையை  தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். “நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறை, ரூ 4.56 லட்சம் கோடி கடன் என அதிமுக அரசு மாநிலத்தைச் சிக்க வைத்திருந்த நிலையில் கொரோனாவும் சேர்ந்ததால் 2020-21 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் மதிப்பீடுகளும் ஒதுக்கீடுகளும் உருவிழந்து, முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.” என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காட்பாடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான  துரைமுருகனும் இதை வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தமிழக அரசு புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே போட்ட பட்ஜெட் பொறுப்பாக முழுநிலையை எட்டவில்லை. ஏனென்றால் பட்ஜெட்டுக்கும் இப்போது ஏற்பட்டிருக்கும் செலவுக்கும் கொஞ்சமும் தொடர்பு கிடையாது. ஒவ்வொன்றுக்கும் கோடிக்கணக்கில் வாங்குவதைவிட ஒரு புதிய பட்ஜெட்டைப் போடலாம்.” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும் துரைமுருகன் கூறுகையில், “முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல தொடக்கத்திலேயே கொரோனாவை கிள்ளி எறியும் காரியத்தை இந்த அரசு மேற்கொள்ளவில்லை. மார்ச் மாத தொடக்கத்திலேயே நாங்கள் (திமுக) அரசாங்கத்தை எச்சரித்தோம். ஆனால், இந்த நோயைப் பற்றி அமைச்சர்களுக்கு தெரியவில்லை. இந்த ஆட்சி கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரம், உயிரிழப்புக்கு அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.