கொஞ்சம் நாள் காத்திருங்கள் நானே கோஷ்டியை உருவாக்குகிறேன். அதுவரை அதனை நீங்கள் மறந்திருக்க வேண்டும் என துரைமுருகன் 
நகைச்சுவை பேச்சால் அரங்கமே சிரிப்பொலியால் கலகலத்தது.  

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பான திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், ஸ்டாலினுக்கு இணையான அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் கிடையாது. அவரைப் போல் மக்களை ஈர்க்கும் சக்தி படைத்தவர்கள் யாரும் கிடையாது, இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வரக்கூடியவராக ஸ்டாலின் உள்ளார். இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியாவின் குடியரசுத் தலைவராகக்கூட வரும் தகுதியும் ஸ்டாலினுக்கு உண்டு என்று தெரிவித்தார்.

தொடர்ந்து நிர்வாகிகளுக்கு அறிவுறை கூறிய துரைமுருகன், உங்களுக்குள் கோபதாபங்கள், மனக்கஷ்டங்கள், கோஷ்டிகள் இருக்கும். வேண்டியவர், வேண்டாதவர்கள் என இருப்பீர்கள். இவர் என்னை அழைக்கவில்லை. அவர் எனக்கு மரியாதை தரவில்லை என்ற எண்ணம் இருக்கும். ஆனால் தயவு செய்து இதையெல்லாம் ஒதுக்கி வையுங்கள். எல்லாத்தையும் 20ஆம் தேதிக்குப் பிறகு வைத்துக்கொள்ளலாம் எனப் பேசினார்.

23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நானே வந்து கோஷ்டியை உருவாக்கிவிட்டுச் செல்கிறேன். ஏனெனில் அது இல்லாவிட்டால் நன்றாக இருக்காது. எனவே கோஷ்டிகள் உருவாக்கும் தினம் என்று வைத்து அதனை செய்துவிட்டுப் போகலாம். அப்போதுதான் நீங்கள் தலைமைக் கழகத்தை மதிப்பீர்கள். ஒன்றாக இருந்தால் கவனிக்க மாட்டீர்கள். எனவே நானே கோஷ்டியை உருவாக்குகிறேன். அதுவரை அதனை நீங்கள் மறந்திருக்க வேண்டும் என நகைச்சுவையாகக் குறிப்பிட அரங்கமே சிரிப்பொலியால் கலகலத்தது.