எதிரும் புதிருமாக உள்ள அதிமுக- திமுக நிர்வாகிகள் சந்தித்துப்பேசுவதே அபூர்வமாக கருதப்படும் நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகனை சந்தித்து ஆரக்கட்டித் தழுவி நலம் விசாரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு அதிமுக சார்பில் ஒற்றை ஆளாய் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ.பி.ரவீந்திரநாத். அதேபோல் தனது மகனை வேலூர் தொகுதியில் போட்டியிடவைத்து மக்களவைக்கு அனுப்பி இருக்கிறார் துரைமுருகன். எதிரும் புதிருமாக ஓ.பி.ரவீந்திர நாத்தும்- கதிர் ஆனந்தும் மக்களவையில் களமிறங்கும் வேளையில் தமிழக அரசியல் களத்தில் துரைமுருகனும்- ஓ.பன்னீர்செல்வமும் கடுமையாக மோதிக்கொள்பவர்கள். 

இந்நிலையில் அந்த அதிசயம் நடந்தேறி இருக்கிறது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் கூழு கூட்டத்திற்கு வருகை புரிந்த குழுவின் தலைவர் துரைமுருகன், அதிமுக மக்களவைத் தலைவர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தின் போது தேனி மாவட்ட ஆட்சி தலைவரோடு, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன், மகாராஜன்  எம்.எல்.ஏ, டி.ஆர்.பாலு மகனும் சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பங்கேற்றாலும், ஓ,பி.எஸ் மகனுடன் மட்டுமே ஆர்வமாக வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார் துரைமுருகன். 

துரைமுருகன் இவ்வளவு அன்பாக பேசியதால் நெகிழ்ந்து போன ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பச்சை கலர் சால்வை வாங்கி துரைமுருகனுக்கு போர்த்தினார். அப்போது துரைமுருகன், ஓ.பி.ஆரை நெருங்கி நீ பெரிய ஆளா வரணும்யா..’ என வாழ்த்து தெரிவித்தார். பின்னர் டி.ஆர்.பி.ராஜாவும், துரைமுருகனும், ரவீந்திரநாத்தை நடுநாயகமாக அமர வைத்து வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். இந்தப்புகைப்படங்கள் வெளியாகி அதிமுக- திமுக நிர்வாகிகளிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.