Duraimurugan condemns Rajinikanth Speech against DMK
ஜெயலலிதாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், கோபாலபுரத்தின் கதவுகளை தட்டியது ரஜினிகாந்துக்கு நினைவில்லையா? என்று, திமுக முக்கிய தலைவர்களிடம் ஆவேசப்பட்டுள்ளார் துரைமுருகன்.
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ஐந்து நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உரையாற்றிய ரஜினி, கடந்த 1996 ம் ஆண்டு, அரசியலுக்காக குரல் கொடுத்தது ஒரு விபத்து என்றும், அரசியலில் முதலைகள் இருப்பதாகவும் கூறினார்.
அவர் ஆதரித்த கூட்டணி திமுக கூட்டணி என்பதால், அவர் திமுகவைதான் முதலை என்று குறிப்பிட்டதாக, அக்கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், இது குறித்து முக்கிய தலைவர்களுடன், செயல் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, திமுகவைதான், ரஜினி முதலை என்று குறிப்பிட்டதாக அனைவரும் கூறி உள்ளனர்.

அதில், பேசிய துரைமுருகன், அவர் என்ன திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று மனப்பூர்வமாகவா குரல் கொடுத்தார்? அவருக்கு ஜெயலலிதா கொடுத்த குடைச்சல்களை தாங்க முடியாமல் வந்து கோபாலபுரம் கதவுகளை தட்டியது ஞாபகம் இல்லையா? என்று கொஞ்சம் கடுமையாகவே கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், அவரது பிறந்த நாளை கொண்டாட முடியாமலும், அவரது ரசிகர்கள் தாக்குதலுக்கு ஆளானதையும் பார்த்து பயந்தது, பாதுகாப்பு கேட்டுதான் அவர் நம் பக்கம் ஓடி வந்தார். அதை எல்லாம் சொல்லாமல், ஆதரவு அளித்தது விபத்து என்றும், நம்மை முதலைகள் என்றும் ரஜினி கூறுகிறாரே? என்றும் துரைமுருகன் ஆவேசப்பட்டுள்ளார்.
பின்னர், ஒரு வழியாக, இப்போதுள்ள நிலையில், ரஜினியை எதிர்ப்பதை விட, அவரை கண்டு கொள்ளாமல் விடுவதே நல்லது என்று, அவர்களே முடிவெடுத்துள்ளனர். ரஜினி அரசியலுக்கு வந்த பின்னால், நாம் நமது கச்சேரியை வைத்து கொள்ளலாம் என்றும் பேசியதாக தகவல்.
