Asianet News TamilAsianet News Tamil

மக்களின் கண்ணீர் சும்மா விடாது.. மின்கட்டண விவகாரத்தில் அடிப்படை தெரியாத ஈபிஎஸ், தங்கமணி.. துரைமுருகன் விளாசல்

மின்துறை அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் ஆட்சியின் அடிப்படை இலக்கணம் புரியவில்லை. அதிமுக ஆட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

Duraimurugan attacked EPS government
Author
Chennai, First Published Jul 21, 2020, 8:08 AM IST

“திமுக ஆட்சியில் தமிழகத்தை இருளில் தள்ளிவிட்டு தற்போது மின்சாரத்திற்கு சலுகை என கூப்பாடு போடுவது, மக்களை திசை திருப்பும் நாடகம்.” என்று மின் துறை அமைச்சர் தங்கமணி திமுகவை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பதிலடியாக திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 Duraimurugan attacked EPS government
அதில், “ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்குள் மக்களை அடைத்து வைத்தது அரசுதான். வெளியில் போனால் அவர்களிடமிருந்து அபராதத் தொகை வசூலித்து - வாகனங்களைக் காவல் நிலையங்களில் காட்சிப் பொருட்களாக பறிமுதல் செய்ததும் அதிமுக அரசுதான். 1.50 லட்சம் பேருக்கு மேல் கொரோனோ நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ரீடிங் எடுக்கும்போது, ஒரு சில நூறு பேருக்கு நோய்த் தொற்று இருந்த நேரத்தில்கூட ரீடிங் எடுக்காமல் இருந்தது அதிமுக அரசுதான். இப்படி அனைத்து தவறுகளையும் அதிமுக அரசே செய்துவிட்டு, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திமுக நடத்தவிருக்கும் மின்கட்டணத்திற்கு எதிரான கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தைக் கொச்சைப்படுத்துவதற்கு கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
இதுபோன்றதொரு சூழலில்தான் மகாராஷ்டிரா, கேரளம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு “கொரோனா கால மின்கட்டணச் சலுகைகளை” வழங்கியுள்ளன. எளிய தவணையில் மின்கட்டணத்தை செலுத்த அனுமதித்துள்ளன. அவை கருணையுள்ள அரசுகளுக்கு இலக்கணம்! ஆனால், மின்துறை அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் ஆட்சியின் அடிப்படை இலக்கணம் புரியவில்லை. தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்பலாம்; ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை நிச்சயம் எழுப்ப முடியாது. அதுபோல்தான், இந்த இருவரும் மட்டுமல்ல; அதிமுக ஆட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். மு.க. ஸ்டாலின் “மக்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா கால மின்கட்டணச் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுங்கள்” என்றுதான் கேட்கிறார். இதில் என்ன குற்றம்? எங்கிருந்து அரசியல் வருகிறது?Duraimurugan attacked EPS government
“வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு 100 யூனிட்டிற்கு ஏற்கனவே கட்டணம் வசூலிப்பதில்லை” என்கிறார். இன்றைக்கு அப்பாவி மக்களை மிரட்டும் இவ்வளவு பெரிய மின்கட்டணத்தை கொண்டு வந்தது யார்? திமுக அறிவித்த மின் திட்டங்களை கடந்த 9 வருடத்தில் நிறைவேற்றாமல் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதில் மட்டுமே அக்கறைகாட்டி மின் வாரியத்தை நிதி நெருக்கடியில் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, இன்னொரு முறை மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று இப்போது திட்டமிட்டுக் கொண்டிருப்பது யார்? அதுவும் அதிமுக ஆட்சிதானே!
அண்டை மாநிலங்களில் அளிக்கப்படும் கொரோனா கால மின்கட்டணச் சலுகைகளை சுட்டிக்காட்டினால், அங்குள்ள மின்கட்டணம் தமிழகத்திற்கும் வேண்டும் என்று எங்கள் கழகத் தலைவர் விரும்புகிறாரா என்று கேள்வி கேட்கிறார் அமைச்சர் தங்கமணி. நான் அவரிடம் கேட்கும் ஒரே கேள்வி, மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய ஒரு அமைச்சருக்கு இது அழகா? அந்த மாநில அரசுகள் வழங்கியிருப்பது கொரோனா கால மின்கட்டண சலுகைகள்! அதைக் கூட ஒப்புக்கொள்ள மறுத்து திசை திருப்பும் பாணியில் அறிக்கை விடுவது அபத்தமானது.

Duraimurugan attacked EPS government
மின் அளவீடுகள் எப்படி செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சரும் சொல்கிறார்; முதலமைச்சரும் பேட்டியளிக்கிறார். எங்கள் கழகத் தலைவர் கேட்கும் ஒரே கேள்வி “முந்தைய மாதம் செலுத்திய மின்கட்டணத்திற்கான பணத்தை கழிக்கும் நீங்கள், ஏன் அந்த தொகைக்குரிய யூனிட்டைக் கழிக்கவில்லை?” என்பதுதான். ஓர் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நேரத்தில் மக்களிடமிருந்து நியாயமான மின்கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பது ஏன் அமைச்சருக்கும் புரியவில்லை; முதலமைச்சருக்கும் புரியவில்லை. இந்த விஷயத்தில் மக்களின் கண்ணீர் சும்மாவிடாது. ஏழை அழுத கண்ணீர் வீண்போகாது என்பதை அரசு உணர வேண்டும்.
ஊரடங்கு கால மின்கட்டண சுமைதாங்கிகளாக மாறியிருக்கும் மக்களுக்கு எளிய தவணையில் மின்கட்டணத்தை செலுத்த அனுமதி கொடுங்கள் என்று எங்கள் கழகத் தலைவர் கேட்டால் - அதைக்கூட செய்யத் தயங்குவது ஏன்? “உயர்நீதிமன்றமே கூறிவிட்டது. அதனால் மின்கட்டணம் பற்றி கேள்வி கேட்கலாமா” என்று கேட்கும் அமைச்சரும், முதலமைச்சரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அதிமுக அரசைப் பார்த்து மின்கட்டணத்தை குறைக்கச் சொல்கிறது திமுக. அதை நிறைவேற்ற முடியாமல் திசைதிருப்ப நினைக்கும் அமைச்சருக்கு நான் நினைவுபடுத்துகிறேன். “விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும்” என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஏன் இந்த அரசு உச்சநீதிமன்றத்தில் சென்று தடை வாங்கியது?

Duraimurugan attacked EPS government
“மின்கட்டண சுமையை குறையுங்கள்” என்று அ.தி.மு.க. அரசிடம் கோருவது மக்கள் நலன் சார்ந்த அரசியல். ஆகவே, மு.க.ஸ்டாலின் கோரிக்கை விட்டிருப்பது போல், மின்கட்டணத்தைக் குறைத்து, எளிய தவணையில் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஊரடங்கு கால மின்கட்டணப் பிரச்சினை என்ன, பிரதான எதிர்க்கட்சி வைக்கும் கோரிக்கை என்ன என்பதையே அமைச்சர் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஒரு அறிக்கையைக் கொடுத்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது வருத்தமளிக்கிறது. 
கொரோனா பேரிடர் நிர்வாகத்தில் “வாட்டர்லூ”-வைச் சந்தித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வக்காலத்து வாங்குவதை விடுத்து - ஊரடங்கு கால மின்கட்டணச் சலுகைகளை அறிவியுங்கள் - மக்களின் கோபத்தை தணியுங்கள் என்று அமைச்சர் தங்கமணியைக் கேட்டுக்கொள்கிறேன். திமுக மக்களுக்காகப் போராடுகிற இயக்கம் - அது இதுபோன்ற “கபட அறிக்கை” “திசை திருப்பும் நாடகம்” போன்றவற்றை எல்லாம் பார்த்து வந்துள்ள இயக்கம். ஆகவே திமுக போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விடலாம் என்று கனவு கண்டால் - அது பகல் கனவாகவே போகும்.

Duraimurugan attacked EPS government
பிரதான எதிர்க்கட்சியின் போராட்டத்திற்குப் பின்னால் உள்ள அப்பாவி மக்களின் “மின்கட்டண உயர்வு” என்ற பெருந்துயரத்தைப் போக்க முன்வாருங்கள். அதற்குப் பதிலாக மக்களின் சாபத்திற்கு உள்ளாகாதீர்கள் என்று அமைச்சர் தங்கமணியை மட்டுமல்ல; முதலமைச்சரையும் நான் எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.” என்று அறிக்கையில் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios