ச்சும்மாவே தி.மு.க.வுக்கு எதிராக கதகளி ஆடுவார் ஹெச்.ராஜா. இதில் அவர் காலில் சலங்கையை வேறு கட்டிவிட்டால், கம்முன்னா கெடப்பார்? பின்னிப் பேர்த்தெடுத்துட மாட்டாரா என்ன?!

இந்தி திணிப்பை கள்ளக்குடி காலத்தில் இருந்து இதோ  கருணாநிதியின் கொள்ளுப்பேரன் காலம் வரை எதிர்த்து எதிர்த்து அரசியல் செய்து கொண்டே இருக்கிறது தி.மு.க. அதிலும் சமீபத்தில் அமித்ஷாவின் கருத்துக்கு எதிராக தி.மு.க.  படை திரட்டியதும், பின் ஏதோ சில காரணங்களால் போராட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டு மெளனமானதும் பெரும் பஞ்சாயத்தாக போய்க் கொண்டிருக்கிறது. இருந்தாலுமே கூட மைக் கண்ட இடமெல்லாம் ‘இந்தியை திணிக்க விடமாட்டோம்! தமிழகத்தில் இந்திக்கு இடமில்லை! எங்கள் உயிரே போனாலும் பரவாயில்லை, இந்தியை எதிர்ப்போம்.’ என்று பேட்டிக்குப் பேட்டி கொந்தளித்துக் கொண்டே இருக்கிறது தி.மு.க. 

இந்த நிலையில் ‘இந்தியை வைத்து நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறது தி.மு.க.வின் முக்கிய தலைவர்களின் குடும்பம். ஆனால் வெற்று அரசியலுக்காக இந்தியை எதிர்ப்பதாக மக்களிடம் நடிக்கிறார்கள்.’ என்று சாத்தி எடுக்கிறார் ஹெச்.ராஜா. இது தொடர்பாக ஒரு பேட்டி போட்டு தாளித்திருக்கும் அவர்  “இங்கே அரசியல் பிழைப்பு நடத்துறதுக்கு தி.மு.க.வுக்கு ஒரு வாய்ப்புமே இல்லை. அதனால, இல்லாத இந்தி திணிப்பை இருப்பதாக சொல்லி ஸீன் போட்டு மத்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்ட முயல்கிறார்கள். 

ஒரு உண்மை தெரியுமா? வெளியில் இப்படி நாடகம் போட்டுக் கொண்டே, உள்ளுக்குள் இந்தியை வைத்து எக்கச்சக்கமாக சம்பாதிக்கிறது தி.மு.க. முக்கியஸ்தர்களின் குடும்பம். பேராசிரியர் அன்பழகனின் பேரன் நடத்தும் பள்ளிக்கூடத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் கற்றுத்தந்து காசு பார்க்கிறார். இதேபோல் தி.மு.க.வின் பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பள்ளிக்கூடம், ஆற்காடு வீராசாமியின் மகன் நடத்தும் பள்ளிக்கூடம் எல்லாத்துலேயும் இந்தி சொல்லிக் கொடுக்கிறாங்க. 

தங்கள் பள்ளிகளின் பாடதிட்டத்தில் இந்தி இல்லாவிட்டால் பிள்ளைகளை கொண்டு வந்து சேர்க்க மாட்டாங்கன்னு இவங்களுக்கு நல்லாவே தெரியும். ஆக சம்பாத்தியத்துக்காக இந்தியை தூக்கி வெச்சு கொண்டாடுறாங்க. இந்த மூணு பேர் மட்டுமில்லை, இப்படி இந்த  கோஸ்டியின் நாற்பத்தைந்து பள்ளிக்கூடங்களின் லிஸ்ட் என்கிட்ட உள்ளது. இதையெல்லாம் ஆதாரத்தோடு எடுத்து விட்டேன்னு வையுங்க, இவங்களுடைய போலியான திராவிட இன வாதம் சந்திக்கு வந்துடும். மக்கள் சிரிக்க மட்டுமில்லை, சிந்திச்சு இவங்களை வீட்டிலேயே முடக்கிடுவாங்க. அந்த நாள் விரைவில் வரும்.” என்கிறார். 

லிஸ்ட்டு இருந்தால் வெளியில் விடுங்க பாஸ். அதுதானே உங்க பேச்சுக்கு அழகு. இல்லேன்னா அவங்களை மாதிரியே நீங்களும் பொய் பேசுறீங்கன்னு ஆயிடாதோன்னோ?!