சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க என்ற எடப்பாடி, பன்னீர்செல்வத்தின் முடிவுக்கு சத்தியமா ஆண்டவன் இருக்கான் சும்மா விடமாட்டான் என டிடிவி ஆதரவாளரான எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். 

நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன. 
பேச்சுவார்த்தைக்கு பிறகு தலைமை அலுவலகம் சென்ற ஒபிஎஸ் அங்கு எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து ஒன்றாக இணைந்ததாக அறிவித்தார். 

மேலும் அங்கு ஒபிஎஸ்க்கு துணை முதலமைச்சர் பதவியும், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. 

பின்னர் பேசிய ஒபிஎஸ்சும், இபிஎஸ்சும் இரட்டை இலையை மீட்டு கட்சியை காப்பாற்றுவோம் என உறுதி மொழி எடுத்தனர். மேலும் சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என வைத்தியலிங்கம் எம்.பி தெரிவித்தார். 

இதையடுத்து டிடிவி தினகரனுக்கு தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி உள்ளிட்ட  19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். 

இதைதொடர்ந்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநர் வித்யாசாகரை சந்திக்க ராஜ்பவனுக்கு வருகை புரிந்துள்ளனர். மேலும் அவரிடம் கடிதம் ஒன்றை கொடுத்தனர். அதில், ஆதரவு எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை முதல்வர் இழந்துவிட்டதாகவும் எனவே முதல்வரை மாற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தங்கதமிழ்செல்வன், சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க என்ற எடப்பாடி, பன்னீர்செல்வத்தின் முடிவுக்கு சத்தியமா ஆண்டவன் இருக்கான் சும்மா விடமாட்டான் என குமுறினார். 

மேலும், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்பது தான் எங்களுக்கு இலக்கு எனவும், மிக விரைவில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்போம் எனவும் தெரிவித்தார்.