இதனால் போட்டித் தேர்வுகளை எழுதுவதிலும் தேசிய மற்றும்  உலக அளவில் வேலை வாய்ப்புகளை பெறுவதிலும், உயர்கல்வி படிப்பதிலும் தமிழக மாணவர்கள் பெரும் பின்னடைவை சந்திப்பார்கள் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

11 மற்றும் 12ஆம் வகுப்பு பாட தொகுப்பு முறைகளில் தமிழக அரசு செய்த தலைகீழ் மாற்றங்கள் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடும் முடிவு என்றும் அதை அரசு உடனே மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம்:- பாடங்களை குறைப்பதாக கூறி 11 மற்றும் 12ம் வகுப்புகளில் தமிழக அரசு அறிமுகப்படுத்தும் புதிய பாடத்தொகுப்பு முறை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் ஆபத்து இருப்பதால் அதனை முழுமையாக மறுபரிசீலனை செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் பல ஆண்டுகளாக மேல்நிலை படிப்பில் பின்பற்றப்பட்டு வரும் பாடத்தொகுப்பு முறையின்(Group)வழியாக படித்தவர்கள் இன்றைக்கு உலகம் முழுக்க சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கல்லூரியில் எதிர்பார்க்கிற படிப்பை படிப்பதற்கு மட்டுமின்றி, எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால், அதற்கு மாற்றாக வேறு படிப்புகளைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளோடு மேல்நிலைக் கல்வி முறை அமைந்திருந்ததும், தமிழ்நாட்டில் படித்தவர்கள் துறைகளைத் தாண்டி ஜொலிப்பதற்கு காரணமாக இருந்தது. தற்போது இந்த பாடத்தொகுப்பு முறையை மொத்தமாக மாற்றப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. உதாரணத்திற்கு பழைய பாடத்தொகுப்பு முறையில் இயற்பியல் மற்றும் வேதியல் பாடங்கள் 14 பிரிவுகளில் இடம் பெற்றிருந்ததை மாற்றி புதிய முறைப்படி 3 பிரிவுகளில் மட்டுமே இந்தப் பாடங்களை வைத்துள்ளார்கள். பழைய முறையில் ஆறு பிரிவுகளில் இருந்த கணிதப்பாடம் புதிய பாடத் தொகுப்பில் 2 பிரிவுகளில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் மேற்கண்ட பாடங்களில் இதுவரை இலட்சக்கணக்கான மாணவர்கள் பெற்றுவந்த பரந்துபட்ட அறிவை இனி மிகக் குறைந்தவர்களே பெறமுடியும். இதனால் போட்டித் தேர்வுகளை எழுதுவதிலும் தேசிய மற்றும் உலக அளவில் வேலை வாய்ப்புகளை பெறுவதிலும், உயர்கல்வி படிப்பதிலும் தமிழக மாணவர்கள் பெரும் பின்னடைவை சந்திப்பார்கள் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். 

இதுபோன்றே தொழில் கல்வி மாணவர்களுக்கு கணினி பயன்பாடு பாடம் நீக்கமும், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட பாடங்கள் இடம் பெற்றுள்ள தொகுப்புகளில் சர்ச்சைக்குரிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற ஏழை மாணவர்கள் மட்டுமின்றி உயர்கல்வி படிக்க நினைக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதோடு ஒரே பள்ளிக்கூட வளாகத்தில் பழைய பாடத்தொகுப்பு முறையும் இருக்கும், புதிய பாடத்தொகுப்பு முறையிலும் கற்பித்தல் நடைபெறும் என்ற தமிழக அரசின் அறிவிப்பே இந்த முடிவை செயல்படுத்துவதில் ஆட்சியாளர்களுக்கு உள்ள குழப்பத்தை காட்டுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில் அந்தந்தக் கால சூழலுக்கு ஏற்ப பாடங்களையும், அவற்றைக் கற்பிக்கும் முறைகளையும் மாற்றியமைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்த மாற்றங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தற்போது இருப்பதை விட இன்னும் ஒருபடி மேலே அவர்களை வாழ்வில் உயர்த்துவதாக அத்தகைய மாற்றங்கள் அமைய வேண்டுமே தவிர இருக்கிற வாய்ப்புகளையும் பறிப்பதாக அமைந்துவிடக்கூடாது. எனவே 'மேல்நிலைக்கல்வி பாடத்தொகுப்பு முறை மாற்றம்' என்ற லட்சக்கணக்கான தமிழக மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான முடிவை தமிழக அரசு முற்றிலுமாக மறுபரிசீலனை செய்து எல்லோரும் ஏற்கத்தக்க வகையில் சீரமைத்து அதன் பிறகே செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அவர் வலியுறுத்தியுள்ளார் .