திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல, தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

தமிழகம் முழுவதும் எழுந்த கடுமையான எதிர்ப்புகளை அடுத்து, அந்த பதிவை நீக்கிய எச்.ராஜா, அதற்கு வருத்தம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். மேலும் அதை தான் பதிவிடவில்லை எனவும் தனது முகநூல் பக்கத்தை நிர்வகிப்பவர்தான் பதிவிட்டார் எனவும் விளக்கமளித்தார். 

ஆனாலும் தமிழகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய எச்.ராஜா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் திக, திமுக உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியிடம், பெரியார் சிலை உடைக்கப்படும் என்று கூறியவரை கைது செய்ய வேண்டும் என்றால், பிள்ளையார் சிலையை உடைத்த உங்களை போன்ற திராவிடர் கழகத்தினரையும் கைதுதானே செய்ய வேண்டும்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கி.வீரமணி, பிள்ளையார் சிலை உடைக்கப்பட்ட காலத்தில் முதல்வராக இருந்த ராஜாஜியிடம் தான், எங்களை ஏன் அப்போது கைது செய்யவில்லை என கேட்க வேண்டும்? என கிண்டலாக தெரிவித்தார். அதற்கு விளக்கமளித்த வீரமணி, கோவிலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை நாங்கள் உடைக்கவில்லை. சொந்த செலவில் சிலை செய்து உடைத்தோம். ஆனால், எங்கள் கருத்திலும் எங்கள் செயலிலும் உறுதியாக இருப்போம். சிலையை உடைத்துவிட்டு பின்வாங்கமாட்டோம். எங்கள் செயலுக்கான எதிர்வினைகளையும் சட்டரீதியான நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம். தேவைப்பட்டால் நாளைக்கு கூட பிள்ளையார் சிலை உடைக்கப்படும் என தெரிவித்தார்.