பாஜகவிற்கு அண்ணாமலை தலைவர் இல்லை.? ஆர்.எஸ்.எஸ்காரர் தான் மறைமுகமாக இயக்குகிறார்- டாக்டர் சரவணன் பரபரப்பு தகவல்
பாஜக மதுரை மாவட்ட தலைவராக இருந்த டாக்டர். சரவணன் திடீரென அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளார். பாஜக மத அரசியலில் ஈடுபடுவதில் உடன்பாடு இல்லையெனவும் கூறியுள்ளார். பாஜகவை ஆர்.எஸ்.எஸ் காரர் மறைமுகமாக இயக்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக - பாஜக மோதல்
தீவிரவாதிகள் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து மதுரை விமான நிலையத்திற்கு லட்சுமணின் உடல் கொண்டு வரப்பட்ட நிலையில், அஞ்சலி செலுத்த வந்த தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆருக்கும் பாஜகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது நிதி அமைச்சர் பிடிஆர் வாகனம் மீது செருப்பும் வீசப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து திடீரென பாஜக மதுரை மாநகர தலைவராக இருந்த டாக்டர் சரவணன், நிதி அமைச்சர் பிடிஆரை சந்தித்து பேசினார். அப்போது செருப்பு வீச்சு சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் மத அரசியலில் ஈடுபடுவதில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும் தெரிவித்தார். எனவே பாஜகவில் இருந்து விலகுவுதாக கூறி அதிர்ச்சி அளித்தார்.
பாஜக மறைமுக தலைவர் ஆர்.எஸ்.எஸ் காரர்
இந்தநிலையில் வார இதழுக்கு பேட்டியளித்த டாக்டர். சரவணன், அண்ணாமலை நல்ல மனிதர் என கூறியுள்ளார். அவரும் சித்தாந்த ரீதியாக பாரதிய ஜனதாவிற்கு வந்தவரல்ல என தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலையையும் விரைவில் கட்சியில் இருந்து அனுப்பிவிடுவார்கள் என கூறியுள்ளார். பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தாலும், மாநில தலைமையில் கேசவ விநாயகம் என்று ஒரு ஆர்.எஸ்.எஸ். காரர் தான் மறைமுகமாக தலைவராக இருப்பதாக தெரிவித்தார். எனவே அவர் சொல்படி தான் தமிழக பாஜக இயங்குவதாக டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். அண்ணாமலை முதல் முறையாக அரசியலுக்கு வந்து இருந்தாலும் அவரை தொடர்பு கொள்வதும், கமலாலயத்தில் சென்று பார்ப்பதும் சிரமமாகவே இருந்ததாக கூறினார். மேலும் மாற்று மதத்தினருக்கு எதிராக பாஜக தீவிரமாக இயங்குவதாக குற்றம் சாட்டிய சரவணன், மத ரீதியாக பிரச்சனையை பெரிது படுத்துவதாகவும் வேதனை தெரிவித்தார். நான் ஒரு மருத்துவர் மதங்கள் பார்த்து வைத்தியம் பார்ப்பதில்லையெனவும் குறிப்பிட்டார். சட்டமன்ற தேர்தலின் போது கூட மருத்துவர் என்ற முறையில் எனது முகத்திற்காக வாக்களித்தவர்களும் உண்டு என டாக்டர் சரவணன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த அதிமுக நிர்வாகி...! ஓபிஎஸ்யை திடீரென சந்தித்து ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு